70
அப்பாத்துரையம் - 25
திரும்பிப்பார்த்து "வாய்ப்பு நேரும்போது வருகிறேன்" என்று சொல்லிச் சென்றான். அவள் நகைத்துக்கொண்டாள்.
அவள் தாய் அவளைப்பார்த்து "இவன் நல்லகுடும்பத் தவன் போலிருக்கிறது. பெண்களிடம் பேச அஞ்சுகிறான்; இவனை எங்கிருந்து பிடித்தாய்?” என்றாள்.
ஆனந்தி: எல்லாம் அப்புவின் வேலை. இந்த ஏழையின் பேரழகினில் பக்குவப் படுத்திவிட்டிருந்தான். தற்செயலாக இவனைக்கண்டு மாட்டை மேயவிட்டு, அந்தச்சாக்கில் அதைப் பிடித்துவரச் சொல்லி அழைத்துவந்தேன்.
தாய்: இவ்வளவு தொந்தரவு எடுத்துக்கொண்டும் அவன் நழுவிவிட்டான். அவன் உன் அழகில் ஈடுபட்டது உறுதிதான். ஆனால் எப்போது மீண்டும் வருவானோ?
ஆனந்தி: எப்போதா? நாளை விடிந்தவுடன் தான் வரப் போகிறான்!
தாய்: அது உனக்கு எப்படித் தெரியும்?
ஆனந்தி: எல்லாம் என் திட்டப்படிதான்.அறையைத் திறக்க உதவினான் அல்லவா? அதன்பின் திறவுகோலை என்னிடம் தரும்போது பேச்சுக்கொடுத்துக்கொண்டே வாங்கி அவன் சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கிறேன். அதைத்தர மறந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்குப் போனபின் அதைப் பார்த்துவிட்டுக் காலையில் அதைத்தர வருவான்.
தாய்: சரியான முன் யோசனை!
சதாசிவன் வீடுபோய்ச் சேரும்போது வழக்கத்திற்கு மாறாக நேரம் சென்றுவிட்டது. அதற்குள் அவன் மனைவி அவனைத் தேடிக்கொண்டு கவலையுடனிருந்தாள். வந்ததும் 'இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டாள்.
சதாசிவனுக்கு நேரடியாக உண்மையைச் சொல்ல முடிய வில்லை. “ஒரு நண்பனிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் சென்றதே தெரியவில்லை” என்றான்.
ஆனால் பெண்களா அம்மட்டில் விடுகிறவர்கள். “அப்படி யார் நண்பர் வந்துவிட்டார்கள் பேச, எனக்குத் தெரியாத நண்பரா?" என்று கேட்டாள் யசோதா.