பேரின்பச் சோலை
83
முடியுமென்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்பாயாக! உன் வலங்கொண்ட மட்டும் மல்லாடுவாயாக! உன் வலிமை உள்ளூர அம்முயற்சியால் வளர்வதை நீயே அறிவாய்.
துன்பத்தில் தூங்கும் சமயம், துவளும் சமயம் உன்னிட மில்லாத ஆற்றல் இம்முயற்சிகளால் ஊற்றெடுத்துப்
பெருக்கமுறும்.
அன்புத் துறவற நெறி
தன்னலம்விட்டு, பொதுநல அவாவாகிய அன்பு உன்னைத் தீண்டுமானால், அந்த அன்பு உன் நெருக்கடியின் ஆற்றலையே தகர்த்துவிடும். ஏனெனில் அன்பின் வழிவரும் மெய்யுணர்வின் முன் எந்த நெருக்கடியும், எந்தச் சூழலும் தாக்குப் பிடிக்க மாட்டாது.
‘துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கட் பிணத்த சுடுகாடு.'
என நாலடியார் அடிகள் சுட்டிக்காட்டும் உண்மை இதுவே. துன்பத்தில் தூங்குபவன் அடைவது சுடுகாடு. அஃது உடலுக் குரிய அழிவுக் களமான சுடுகாடு மட்டுமன்று. அறிவுக்கும் புதுவாழ்வுக்கும் தடையிட்டு, ஆன்மிக அழிவும் தரும் சுடுகாடு ஆகும். அதிலிருந்து விடுபட உதவும் துறவு உலக வாழ்க்கையே துறந்த துறவன்று - குறுகிய தன்னல், தற்பற்றுந் துறந்து, அகன்ற பொதுநல, கடவுட்பற்று மேற்கொண்ட துறவேயாகும். உண்மை யில், உடல் பற்றிய மட்டில் தன்னலவாணனும் சரி, துறவியும் சரி, ஒரே வகைச் சுடுகாட்டுக்கே இரையாகின்றனர். ஆனால் தன்னலவாணன் உடல் தீயிலிட்டெரிக்கப்பட்ட கரும்பு போலச் சாறும் சக்கையும் ஒருங்கே கெட அழிகின்றது. மாறாகத் தன்னலம் துறந்த துறவியின் உடலோ, உடலின் பயன் முற்றும் பெற்றபின் அழிகிறது. அவ்வழிவு சாறெடுத்துப் பேணப்பட்ட பின் எரிக்கப்படும் சக்கை போன்றது. சக்கையை எரிக்கமட்டுமே உதவும் தீ அச்சாற்றைக் காய்ச்சி வெல்லமாக்க, கற்கண்டு, மணிக்கண்டு ஆக்கவும் உதவுகிறது.
துன்பத்தில் இன்பம் கண்ட மாது
சுமை வீழ்ச்சிக்கு, துன்பத்தில் இன்பங் காணும் தூய வாழ்வுக்கு ஏழை மக்களிடமே போதிய சான்றுகள் காணலாம்.