உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

அப்பாத்துரையம் - 29

தனி உலகாகக் காண்கின்றது. அவ்வாறே செயலாற்றவும் செய்கிறது. எல்லா உயிர்களுக்கும் உரிய ஓருலகு இங்ஙனம் உயிர்களின் போலி அனுபவத்தால் ஒவ்வோர் உயிருக்கும் உரிய பல்வேறுபட்ட உலகமாகக் காட்சியளிக்கிறது. இக்காட்சியின் விளைவே பொய் வாழ்வு, போலி வாழ்வு - தன்னலத் தனிவாழ்வு. இது கடந்து செயலாற்றும் தனி உயிரே பொது உணர்வில் ஈடுபட்டு உலகு வளர்த்து உயிரும் வளர்க்கிறது.

பொதுஉணர்வு கண்ட தனி உயிரே மற்ற உயிர்களை அதில் ஈடுபட வைக்கும் எண்ணத்துடன் அதனைக் ‘கடவுள்' எனக் கற்பித்தது. பொதுமை யுணர்வற்ற சமயவாணர் கடவுளை எளிதில் உணர முடியாமலும், தாம் உணரும் கடவுளை, கடவுட் கருத்தை, வாழ்வுடனும் உலகுடனும் பொருத்திக் காண முடியாமலும் இடர்ப்படுவது இதனாலேயே யாகும்.

வாழ்க்கை என்பது வாழ்வின்வழி அறிந்தவனுக்கு ஒரு போராட்டமே. ஆனால் அது புறப் போராட்டமல்ல, அகப் போராட்டம். அதில் வெற்றி இறுதியாக வருவதல்ல. வெற்றி தோல்விகளின் பின்வரும் இறுதிநாள் வெற்றியல்ல. அது தொடர்ச்சியான வெற்றி, நாள்தோறும் பெறும் சிறுமணி வெற்றிகளின் தொகுப்பான வெற்றி மணிமாலை.

ஒவ்வொரு நாளும் மனிதன் தன்னுள் ஒவ்வொரு தீய சிறு பண்புடன் போராடுகிறான். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஓர் அன்பிலாக் கருத்தை, ஒரு தூய்மையற்ற தன்னல அவாவை, ஒரு சிறு பழிசார்ந்த பழக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு கொண்டே செல்கிறான். அவன் வெற்றிகள் ஒரே பெரு வெற்றி யாக, மொத்த வெற்றியாகத் திரளவில்லை. ஒவ்வொரு வெற்றியும் அவனை, அவன் சூழலை, அவன் வாழும் உலகை, னத்தை ஒரு படி முன்னேற்றி வளர்க்கிறது.

இறுதியில் அஃது அவனை மாசற்ற தூய பேராற்றல், பேருணர்வு, பேரின்ப ஒளியாம் வாய்மையின் வாயிலில் கொண்டு விடுகிறது.

ஒவ்வொரு சிறு வெற்றியும் உண்மையில் அவ்வாயில் கோபுரத்துக்கு அவனை இட்டுச் செல்லும் ஒரு படியாக உதவுவதே ஆகும்.