(218
||--
அப்பாத்துரையம் - 29
உன்னைக் கிடத்தியுள்ளது. எல்லையிலா நீடின்பத்தை நீ பாரா திருக்க, மறைக்க அது வழிவகுக்கின்றது. அந்த இனிய பண்ணிசை கேளாதிருக்கும்படி அதையே ஆரவாரக் கம்பலையாக்கி உன் செவிகளை அடைக்கின்றது. கனவிலும் அதன் அழகொளி வந்தெட்டி விடாவண்ணம் மடமை உன் கண்ணுக்கு முன் கவர்ச்சிகரமான மேற்பூச்சு வண்ணங்கள் கொண்ட பேயுருக்களை அனுப்புகின்றது. அதன் நறுமணம் நீ செல்லும் பாதையெல்லாம் சூழ்ந்து கிடந்தாலும் அதை நீ முகர மாட்டாமல் துயர்சேர் வாடைகளை நீயே சுமந்து செல்லும்படி அஃது உன்னைத் தூண்டுகிறது.சோர்வும் துயரும் போக்கும் நறுமணத்தை நீயாகத் தடுத்து நிறுத்துகிறாய்.
பழியும் தன்முனைப்பாகிய ஆணவமும் அகன்று, தற்பற்றுச் சார்ந்த அவா ஒழிந்தபின் துயரமேகங்கள் மறைகின்றன. அழிவிலா இன்பம் இதயஞ் சூழ்ந்து பரவி அதற்கு ஒளியூட்டு கிறது. துயர இருள் மண்டிக் கிடந்த இடங்களிலெல்லாம் இன்ப நிலவு ஒளிகாலுகின்றது. கொந்தளித்துக் குலைவுற்ற இடத்திலே குறையற்ற நிறையமைதி படிகின்றது. தூய்மை உயிர்த்துடிப்புடன் மூச்சுவிடத் தொடங்குகிறது.
இன்பம் தன்னலத்தின் வாடைபட்டால் ஓடுவது. அது பூசலிருக்கும் இடம் நாடாது. தூய்மைக் கேட்டின் நிழல் பட்டால், அஃது உள்ளத்தடத்தில் ஆழ்ந்து மறையும், அதைச் சூழ்ந்து ஒட்டாது சுற்றியோடும். கணவனிடமன்றி வேறு எவரிடமும் தங்கு தடையின்றி வெளிப்படாக் கற்புடைப் பெண்மை போன்றது இன்பம். அதன் கணவன் அன்பு. அன்பின் பகையாகிய தன்னலம் உலவுமிடத்தருகே அது நாடாது.
தன்னல அவாக்களை ஒழித்த அளவிலேயே இன்பம் இன்முகம் காட்டும். அதன் முழுநலமும் நுகர்பவர் அதன் எல்லையிலா, ஓய்விலா நிறை இன்பம் துய்ப்பவர். கணத்துக்குக் கணம் புதிதுபுதிதாகப் பொங்கும் அதன் வரம்பிலா வளத்தில் தோய்பவர் தூய்மையில் குளித்தெழுந்து அதனுடன் பழகி முழுத் தூய்மை பெற்றவரே. ஆயினும் தன்னலமற்ற உயர்நிலையை ஒரு கணம் எட்டிப் பார்த்தவர்மீது கூட அதன் இளநகை முகிழாமலிராது. இதனால் வரும் இன்ப அமைதி, உணர்ச்சியில்
காந்தளிக்கும் வெந்துயர் கலந்ததன்று. துயரின் உருக்கரந்த