உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

9

அறுதி செய்யும். தொடக்க முயற்சி தீதாயின், அதன் பின் விளைவுகளும் கேடாகும் என்பதில் ஐயமில்லை. ‘முதற்கோணல் முற்றும் கோணல்' என்ற தமிழ்ப் பழமொழியும், 'நல்ல தொடக்கம் பாதி முடிவு' (Well begun is half done) என்ற ஆங்கிலப் பழமொழியும் குறிக்கும் உண்மை இதுவே. ஆனால் பிந்திய பழமொழி நல்தொடக்கத்தின் இயல்பை விளக்குகிறது. அதன் சொற்பொருளைவிட அதன் உட்பொருளும் முழுப்பொருளும் பெரிது. மேலீடாக, நல்ல தொடக்கம் அதன் தொடர் விளைவு களில்லாமலே பாதி முடிவு ஆகும் என்று தோற்றுகிறது.ஆனால் தொடக்கம் தொடர்புறாமல் நின்றால் அது உண்மையில் பாதி முடிவு ஆய்விடமாட்டாது. ஆகவே தொடர்புடைய தொடக் கத்தில் அத்தொடக்கமே பாதி முடிவு என்பதே அப்பழமொழி யின் செம்பொருள். தொடக்க முயற்சிக்குப் பின் தொடர்பு முயற்சி மட்டும் இருந்தாலே முழுவெற்றி கிடைத்துவிடும். ஏனெனில் அத்தொடக்கமே கிட்டத்தட்ட முழுவிளைவாய்த் தானாகப் பெருகிவிடுகிறது. தொடக்க முயற்சியே தொடர்ந் தால், தொடங்குபவன் எதிர்பார்ப்பதைவிடப் பன்மடங்கு வளம் பொங்கும் என்பது தெளிவு.

வினைத் தொடக்கம் வினைத்தொடர்பாகவே சென்று கொண்டிருக்க முடியாது. அதற்குத் தற்காலிகமாகவாவது ஒரு வினை முடிவு இருந்துதானாக வேண்டும். அதுவே, அதன் பயன், இலக்கு, அதன் செயல் கடந்த உரு. ஒவ்வொரு வாயிலும் ஒரு பாதையில் நம்மைச் செலுத்துகிறது. பாதை ஒரு கட்டடம், ஒரு பூங்கா, ஒரு கோயில் அல்லது இவை போன்ற ஓர் இலக்குக்கு நம்மை இட்டுச் சென்றாக வேண்டும். இல்லாவிட்டால் ‘வாயில்' என்பதற்குப் பொருளே இல்லை. அதுபோலத் தொடக்கம் என்பதும் காரணம் என்பதும் வழி என்பதும் கட்டாயம் ஒரு முடிவு, காரியம் அல்லது இலக்குடன் தொடர்புடையவை ஆகும். பிந்தியவை இன்றி முந்தியவை பொருளற்றன ஆய்விடும். தொடக்கம் வினையின் உயிர்ப்பாதி அல்லது ஆன்மிகப் பாதி; விளைவு அதன் செயல் கடந்த உடற்பாதி அல்லது இயற்பாதி. இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதே செயற்படும் வினைக்கூறு என்னலாம்.