(274) ||
அப்பாத்துரையம் - 29
தற்சார்புடையவன் தற்பெருமையுடையவனல்லன். அதை
அறவே நீக்கியவன். அவன் தற்பணிவுடையவன், தன் வாழ்வின் நோக்கத்துக்கு, அமைதிகளுக்கு, தன்னுள் அமைந்த ஒளிக்குக் கட்டுப்பட்டவன். இதன்மீது நின்று, இதன்மீதே அவன் தன் போக்குவரவுகளை, இயக்கங்களை வகுத்தமைத்துக் கொள் கிறான். அதை மையதளமாகக் கொண்டே அவன் சரிசமநிலை அமைகிறது. அவாக்களென்னும் புயல்கள், உணர்ச்சி வெறிக ளென்னும் அலைகள் அவனை எத்திசையில் தள்ள முனைந் தாலும் அவன் அதையே தன் காப்பகமாகக் கொண்டு பற்றி நிற்கிறான்.
கருத்து வேறுபாடுகளிடையேயும் தற்சார்பின் சரிசம நிலையே ஒருவன் ஒழுங்கு மையம் ஆகிறது.புயலோ, அலையோ அவனை அதிலிருந்து தள்ளி அப்புறப்படுத்தினால்கூட, அவன் அடத்த முயற்சிகள் யாவும் அதை மீண்டும் சென்று பற்றுவ தாகவே இருக்கும். ஏனெனில் அது அவன் வாழ்வு. அதை அடையும்வரை அவனுக்கு வேறு வாழ்வு, வேலை கிடையாது. இந்நிலையை அவன் அடைந்தபின், அவன் இன்ப முற்றிலும் அவன் கைப்பொறுப்பாகி விடுகிறது.
உன் தற்சார்பை உன் வாழ்வின் மையமாக, வாழ்வின் சரிசம தளமையம் அல்லது 'ஏண்' ஆக்கிவிட்டால், உன் வாழ்வின் வெற்றிக்கு அதுவே அடிகோலிவிடும். உன் வாழ்க்கைத் தொழில் எதுவாயினும், அதில் நீ வெற்றி காண்பது திண்ணம். உன் வாழ்வில் நீ எண்ணிய எக்காரியமும், மேற்கொண்ட எச் செயலும் வெற்றியடையாமல் போகாது. ஏனெனில் தற்சார் புடைய மனிதன் எப்போதுமே தோலாவெற்றி மேற் கொண்டவன்.
நீ பிறர்மீது, பிற பொருள்களின்மீது சாராவிட்டாலும், பிறரிடமிருந்து படிப்பினை கொள்ளத் தயங்காதே. எதையும் கூர்ந்து கவனித்து அதன்மூலம் புத்தறிவு பெறத் தவறாதே. அறிவைப் பெருக்கும் வாய்ப்பு எதுவாயினும், அதைக் கைவிடக் கூடாது.நல்லன, பயனுடையன எவையாயினும் உன் சிந்தனைக்கு அவற்றை விருந்தாக்கு.
தற்பணிவு எவ்வளவு உன்னிடம் இருக்க முடியுமோ, எவ்வளவுக்கு அதை நீ வளர்க்க முடியுமோ, அந்த அளவும் நலம்.