உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

கடமைகள், உயிர் வளர்ச்சியின் படிகள்

29

ஒவ்வொரு கடமைக்கும் அததற்குரிய சரியான நேரத்திலும் இடத்திலும் மனிதன் தன் முழுக்கருத்தையும் தன்னலமற்ற சிந்தையையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கடமையும் நிறைவேறி வாழ்க்கை இயல்பான படிப்படியான உயிர் வளர்ச்சி பெறும். ஒவ்வொரு கடமையும் நிறைவேறுந் தோறும் அடுத்த கடமைகள் அடுக்கின்றன. பல கடமைகள் நிறைவேறும்போது புதிய கடமைகள் கூட்டுக் கடமைகளாக எல்லை விரிந்தும், உயர் கடமைகளாகப் பண்பில் உயர்ந்தும் மலர்ச்சியடைகின்றன. இவை மனிதனுக்குரிய ஆற்றலை வளர்க்கின்றன. அவற்றின் செயல் நிறைவேற்றம் ஒவ்வொன்றும் அவன் அறிவை, நுண்ணாற்றலை, நற்பண்பை வளர்க்கின்றது.

ரு

கடமை நிறைவேற்றுதல் மூலம் மனிதன் படிப்படியாகத் தன்னையறியாமலே மேன்மேலும் உயர்படிக்கு வளர்கிறான். இவ்வளர்ச்சி செடியின் வளர்ச்சிக்கு ஒப்பாகும். உண்டுவாழும் ஒரு செயலையே செடி பலபடிகளில் செய்கிறது. ஆனால் இந்த ஒரு செயலின் படிகள் மூலமே அது உயர்ந்து பரந்து வளர்கிறது. இலை தளிர் தழைக்கிறது; பூக்கிறது. ஏனெனில் செடி மேற் கொள்ளும் ஒவ்வொரு செயலின் படிகளும் உயிர்வாழ்வை ஊக்குகின்றன. உயிர் வாழ்வு மற்றப் பல்வண்ண வளர்ச்சிகளைத் தானே தன் மரபில் நின்று செய்து விடுகிறது. கடமை நிறை வேற்றம் இதுபோலவே ஆன்மிக ஆற்றலைப் படைத்து உருவாக்கி வளர்த்துவிடுகிறது. அந்த ஆன்மிக ஆற்றல் மாய உயிராற்றலாதலால், முயல்பவன் அறியாமலே இயற்கை வழி நின்று மலர்ச்சியடைகிறது. மனிதன் சிறு செயல்கள் எல்லாம் உண்மையில் உயிர்க்கட்ட மாகிய இந்த ஆற்றலை எழுப்பும் ஒவ்வொரு படிகள் ஆகும். ஒவ்வொரு சிறு கடமையும் ஒரு கல்லாக அல்லது கட்டட உறுப்பாகத் தனித்தனி நயம்படச் செய்து ஒன்றுடன் ஒன்று இசைவித்து மனிதன் கட்டடத்தை முழுமையாக்குகிறான். இவ்வுயிர்க் கட்டடத்தில் உறுப்புக்கு உறுப்பு, பகுதிக்குப் பகுதி முரண்பாடும் சிக்கலும் இல்லாமல் அவன் நற்றொடக்கமும் அகத்தூண்டுதலும் பார்த்துக் கொண்டால், அவ்வுரியிர்க் கட்டடமே ஆன்மிக வாழ்வாகத் தன் உயிர்ச்செயல்களின் மூலம் இயல்பாக அமைந்துவிடும்.