உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

11

அறிவு நிரம்பாத அந்த ஏழைச் சிறுமியை யாராவது கீழே கண்டால் கண்டபடி அடித்துவதைப்பார்கள் என்பது அறிவு மிக்க லாரைனுக்கு நன்றாகத் தெரியும்.

“வேண்டாம் லீமா. சமயம் பார்த்து நான் அவ்வப்போது போய் எடுத்துத்தரவில்லையா? நீ போனால் அவர்கள் யாரிட மாவது அகப்பட்டுக் கொள்வாய். அவர்கள் இரக்கமில்லாதவர்கள். உன்னை அடித்து நொறுக்கி விடுவார்கள். அப்போது நான் என்ன செய்வேன்! வேண்டாம் லீமா; இதோ தெருவில் கூட்டம் பெருகி விட்டது. வாதுமைக்காரி வரும் நேரமாயிற்று" என்று லாரைன் தமக்கையை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள்.

வாதுமைக் காரியைக் கண்டதும் லீமா "அதோ, வாதுமைக் கொட்டைகள் பார். நேற்று நமக்கு இரண்டு கொட்டைகள் எடுத்தெறிந்தாளே, அதே மாதுதான். இப்போதும் நீ போய் ஏதாவது வாங்கிவா” என்றாள்.

லாரைன்: “இறங்கிப் போகப்படாது இப்போது அகதா வரும் நேரம். அவள் கண்டு விட்டால் உள்ளதும் கெட்டுப் போகும். நான் இங்கிருந்தே வாங்குகிறேன்.,பார்.”

கந்தல்களைக் கயிறாகக் கட்டி அதில் ஓர் அழுக்குக் கூடையை இணைத்துத்தெருவில் இறக்கினாள் லாரைன். வாதுமைக்காரி புன் முறுவலுடன் குழந்தையின் அறிவைக் கண்டு வியந்தாள். கூடையினுள் லாரைன் தன் கைக்குட்டைகளில் ஒன்றைப் போட்டிருந்தாள். வாதுமைகள் வாங்கக் காசில்லாத தால், காசுக்குப் பகரம் அதனை அவள் போட்டு வைத்திருந்தாள். அதைப் பார்க்க, வாதுமை விற்பவளுக்குக் கூடக் கண்களில் நீர் ததும்பிற்று. அவள் அக்கைக்குட்டையை எடுத்து முத்தமிட்டு, இரண்டு மூன்று கொட்டைகளைக் கூடையிலிட்டாள். பின் அவள் கைக்குட்டையையும் கூடையிலேயே போட்டு. அதை மேலே அனுப்பினாள். இது கண்ட லாரைன் அவளைக்கனிவுடன் பார்த்து, தன் கனிந்த நோக்கினால் நன்றி தெரிவித்தாள்.

மாடியில் தனியேயிருந்து துணையற்றுத் தவித்த அக் குழந்தைகளைப் பற்றிய பேச்சே அந்நகரெங்கும் ஏழை மக்கள் குடிகளில் கதையாயிருந்தது. போவார் வருவார் எவரும் இரக்கத்துடன் பலகணிகளில் எட்டிப் பார்க்காமல் செல்வ தில்லை. ஆனால், ஏழைகள் இரங்கி என்னபயன்? ஏழைகளும் இறைவனும் இவ்வுலகில் என்ன செய்ய முடியும்?