உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

15

காரன் அவள் மீதுள்ள பொறாமையால் தன் வீட்டுத் தலைவி யிடம் அவள் செய்த காரியங்களை வெளியிட்டுச் சினமூட்டி யிருந்தாள். பெருமாட்டி தன்னைக் கையும் மெய்யுமாகப் பிடித்து விட்டதுடன், கூடுதல் துப்புகளும் வைத்திருக்கிறாள் என்று தெரிந்த அகதா எண்சாணும் ஒரு சாணாகக் குன்றினாள்.

பெருமாட்டி இக்குழப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டாள்.அவள் வேலைக்காரருக்கான மணியைத் தடதடவென அடித்தாள். வேலையாட்கள் எல்லாரும் வந்தனர். வீட்டுக்காரர் எங்கே என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள்.

இச்சமயம் திரு. சார்லஸ் பெரோன், மாது பெரோன் ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்தனர். இதுதான் சமயம் என்று மாது பிளான்ஸி பிள்ளைகளை அகதாவின் ஆட்சியிலிருந்து மீட்டுத் தன் வண்டியில் வைத்துக்கொண்டு தன் வீடு சென்றாள். பணியாட்கள் தங்கள் பொறுப்பைக் குறைப்பதற்காகத் தலைவர் தலைவியிடம் பிளான்ஸி கண்ட காட்சிகளையும், அவள் சீற்றத்தையும் பெருக்கிக் கூறினார். அவர்களுக்கும் பிளான்ஸியின் கடுநாக்கின் முன் நடுக்கமே. ஆகவே, அவர்கள் பேசாமல் அவளிடமே பிள்ளைகளின் பொறுப்பை விட்டுவிட்டார்கள். குழந்தைகள் சார்பில் அனுப்ப வேண்டிய பணத்தையும் சூசேன் அவளுக்கே அனுப்ப ஒப்புக் கொண்டாள்.

ழீன் வயிற்றில் பிறந்த ஒரு குற்றத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே தண்டிக்கப்பட்டுப் பல அல்லல்களுக்காளான குழந்தைகள் இக்கொடுஞ் சிறையிலிருந்து, மாது பெரோனின் வஞ்சனை, அகதாவின் கொடுமை ஆகியவற்றிலிருந்தும் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் உதவியால் விடுதலையடைந்தனர். அவர்கள் வாழ்வின் முதல் கொடும்பகுதி-துன்பத் தொட்டில் - முடிவுற்றது.