உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

19

முறைக்குமேல் குழந்தைகள் தந்தையைப் பார்க்கச் செல்லும்படி அவள் இணங்கவில்லை. அங்கே சென்றபோதும் தந்தையுடன் குழந்தைகள் தங்குதடையின்றிப் பழக முடியவில்லை. மாது பெரோன் பிள்ளைகளுடன் தந்தை பாசங்கொள்வதை வெறுத்தாள். சார்லஸ் பெரோன் தன் வருவாயிலிருந்தே அவர்களுக்குப் பங்கு தந்துவிடக் கூடும் என்று அவள் அஞ்சினள். இவ்வெண்ணத்துடன் அவள் லாரைனைப் பற்றியும் லீமாவைப் பற்றியும் கணவனுக்குப் பலவகையில் தப்பெண்ணங்கள் ஏற்படும்படி எல்லாச் செய்திகளையும் திரித்துக் கூறி வந்தாள். தந்தை செல்வத்தைக் கறப்பதற்காகவே லாரைன் பாசங் காட்டிச் சூழ்ச்சி செய்கிறாள் என்றும், மாது பிளான்ஸி தந்தையிடம் உட்பகைமை கொள்ளும்படி அவளைத் தூண்டி வருகிறா ளென்றும் கணவனுக்கு அவள் ஓதிவந்தாள். இந்நிலையில் பெரோன் லாரைனிடம் ஏதிலாரைப்போல நடந்து கொண்டதில் வியப்பில்லை. பாவம், லாரைனுக்குத் தாய்ப்பாசம் இல்லாமல் போனது மட்டுமின்றி, தந்தையின் பாசத்துக்கும் இடமில்லாது போயிற்று.

குழந்தைகளைத் தாய் தந்தையர் வளர்க்கும்போது கூடக் குழந்தைகள் ஆர்வங்களைத் தாய் தந்தையர் அறிந்து ஆதரவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயுள்ள வயது வேறுபாட்டால் குழந்தைப்பருவ அவா ஆர்வங்களை அவர்கள் அறியாது போவதுண்டு. ஆனால், லாரைனை வளர்த்தவளோ, தாயல்ல, பாட்டி. அத்துடன் அவள் கடுமை முறையிலே பழகியவள். லாரைனின் இளமைக் கவர்ச்சியுள் அவள் நடையுடையின் எளிமையழகும் அவளுக்குப் பிடிக்கவில்லை. லாரைன் எல்லாரிடமும் அன்பாயிருந்ததனால், பணிப்பெண்கள் வேலையாட்கள் வரை யாவரும் அவளிடம் இரட்டிப்பு அன்பாதரவு காட்டினர். இதுவும் கிழவியின் சீற்றத்தைப் பெருக்கியது. அவள் லாரைனின் உடையில் குற்றங் கண்டாள்; அவள் சிரித்தால் தவறு; விழித்துப் பார்த்தால் தவறு. சிறை வாழ்வில் குற்றவாளிகள் காணாத கொடுமைகளை, கூண்டில் பறவைகள் அடையாத துன்பங்களை அந்நற்குண நங்கை இளமையிலேயே அனுபவித்தாள்.