உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருமணப் பேச்சுகள்

இளவேனிற் பருவம் கழிந்து நடுவேனிற் பருவம் வந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கின. இப்போது இருப தாண்டு நிறைந்து இளமையின் முழுமலர்ச்சியுடன் எழிலரசியாக லாரைன் விளங்கினாள். அழகு நடமிடும் பாரிஸ் உயர்தர வாழ்விலேகூட அவள் அழகு எல்லார் கருத்தையும் கொள்ளை கொண்டது. குழந்தைப் பருவத்திலேயே அமைதி மிக்க அவள் தோற்றம் இப்போது விழுமிய பெருமித உணர்ச்சியும் தருவதாயி ருந்தது. ஆனால் அவள் உடலிலும் தோற்றத்திலும் இருந்த மலர்ச்சி இன்னும் அவள் வாழ்வில் இடம்பெறவில்லை. அவளது ஒவ்வொரு விருப்பத்தையும் மலரைக் கசக்கி யெறிவது போல எறிவதே தன் கடன் என் அவள் பாட்டி மாது பிளான்ஸி கருதினாள். தந்தையோ அவளை என்றும் ஒரு சிறிதும் அறிய முடியாதபடி மாற்றந்தாய் இடையிலிருந்து தடுத்து வந்தாள்.

மலர்களிலும் மலர்ச் செண்டுகளிலும் லாரைனுக்குள்ள அவாவை உணர்ந்து திரு. மான்கண்டர் ஒருநாள் அவளுக்கு ‘வாடாத’ செயற்கை மலர்ச் செண்டு கெண்டு வந்து கொடுத்தார். மலர்கள் இயற்கை மலர்களின் நிறமும் மென்மையும் உடையவை யாயிருந்துடன், அவ்வம் மலர்க்குரிய நறுமணம் ஊட்டப் பெற்றிருந்தது. எலினாரின் உள்ளார்ந்த ஆர்வமுழுவதும் இம்மலர்ச் செண்டில் ஈடுபட்டு மகிழ்ந்தது. அவள் அப்போது பாட்டியைக் காணச் சென்று கொண்டிருந்தாளாதலால், அதனைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்வையிடச் சென்றாள். பாட்டியுடன் அவள் வண்டியேறி உலாவச் சென்றபோதும் இது அவள் ஆடையுள் இடம் பெற்றிருந்தது.

லாரைனைத் திடீரென்று மாது பிளான்ஸி ஏறெடுத்துப் பார்த்து, "நிமிர்ந்திரு, லாரைன்!" என்றாள். லாரைன் தன் பன்மலர்ச் செண்டைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தாள்.