உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. முதலை மாப்பிள்ளை

மருதாற்றின் வடக்கே ஆத்திக்காடு என்று ஒரு காடு இருக்கிறது. அதில் செவ்வோரி என்ற ஒரு நரியும், சிறுகாலி என்ற அதன் மனைவியும் வாழ்ந்தன. சூழ்ச்சித் திறத்திலும் நகைத் திறத்திலும் நரி உலகிலேயே செவ்வோரிக்கு ஈடுகிடையாது.

பொங்கல் தோறும் செவ்வோரி எங்கிருந்தாவது கரும்பு, மஞ்சள், இஞ்சி, நெல் ஆகியவற்றைத் தேடிக் கொண்டு வரும், சிறுகாலி பொங்கல் படைத்து, உண்டு, உடுத்து மகிழும். உறவு முறையான நரிகளையும், நண்பர்கள், அண்டை அயலார்களான நரிகளையும் அழைத்து விருந்து வைக்கும்.

சிறுகாலி அந்த ஆண்டில் கருவுற்றிருந்தது. அதற்கு அச்சமயம் வெள்ளரிக்காய் தின்ன ஆவல் உண்டாயிற்று. பொங்கல் நாளன்றே நிறைய வெள்ளரிக்காய் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்று செவ்வோரி கருதிற்று.

ஆத்திக் காட்டில் அந்த ஆண்டு வெள்ளரிக்காயே அகப்பட வில்லை. ஆனால், மருதாற்றுக்குத் தெற்கேயுள்ள வேம்பன் காட்டில் நிறைய வெள்ளரிக்காய் இருப்பதாக அது கேள்வியுற்றது.

ஆயினும், மருதாற்றில் வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படிக் கடப்பது என்ற செவ்வோரி சிந்தனை செய்து கொண்டிருந்தது.

அச்சமயம் ஆற்றில் கரையோரம் ஒரு முதலை வருவதை அது கவனித்தது. அதற்கு ஒரு புதிய வழி தென்பட்டது. ஆகவே, அது முதலைக்கு வணக்கம் தெரிவித்தது.

"ஆற்றலும் அழகும் மிக்க முதலையாரே! வணக்கம் எங்கே இப்படி?” என்று முதலையிடம் நரி நலம் பாராட்டிற்று.