உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

29

"தங்களைப் போன்றோர் இவ்வளவு அருகே இந்தக் காட்டிலிருக்கும் போது, எங்களுக்கு என்ன குறை?” என்ற அவன் அறவோரின் நலம் பாராட்டினான்.

"அப்படியே உன் வாழ்வு நிறைவு பெறுக. நாளை உன் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் செல். ஒரு நாழிகை தொலை சென்ற பின், பன்னிரண்டு புறாக்கள் மரத்தின்மேல் விரித்திருக்கும் ஒரு போர்வையைத் தூக்கிச் செல்ல முயல்வதைக் காண்பாய். புறாக்கள் மீது படாமல் அவற்றிடையே ஓர் அம்பைச் செலுத்து. புறாக்கள் ஓடிவிடும். போர்வையும் அம்புபட்ட ஒரு மாம்பழமும் கீழே விழும். அந்தப் போர்வை இந்திரபடாம். அது உன்னை நினைத்த நினைத்த இடத்திற்குக் கொண்டு போகும். அந்த மாம்பழம் பொன் மயமாயிருக்கும். அது கற்பகக் கனி. அதை உன் தலையணையடியில் வைத்துப் படுத்துக் கொண்டால், ஒவ்வொரு நாள் காலையிலும் அதனடியில் ஒரு வெண்காசு உண்டாகும். இவற்றால் உன் வகையற்ற வாழ்வில் சை பெருக்குக" என்று அறவோர் கூறியகன்றார்.

கீரன் அறவோர் கூறியபடியே சென்றான். இந்திர படாமும் கற்பகக் கனியும் அவன் கைவசமாயின. அவன் கையில் விரைவில் ஒரு பொற்குவை சேர்ந்தது. அவன் அவற்றுடன் நாடு சுற்றப் புறப்பட்டான்.

போர்வை எப்போதும் அவன் தோளில் கிடந்தது. கற்பகக்கனி அவன் கையிலுள்ள சிறு மூட்டையில் இருந்தது. அவன் அவற்றைக் கவனமாக வைத்துப் பேணினான்.

பல நாடுகளைப் பார்த்துவிட்டு, அவன் வைர மாமலையின் சாரலடுத்திருந்த பொன்மணி நாட்டுக்குச் சென்றான். அங்கே நகருக்கப்பால் மலையை அடுத்து ஒரு மாளிகை இருந்தது. அதன் வாயிலில் ஓர் அழகிய நங்கையும் அவள் தாயும் நின்றிருந்தார்கள். தாய் அவனை அன்புரைகளுடன் வரவேற்று. தன் மாளிகையில் தங்கிப் போகும்படி வேண்டினாள். அவனுக்கு இப்போது களைப்பு மிகுதியாயிருந்தது. அத்துடன் இளநங்கையின் புன்முறுவல் அவனைக் கவர்ந்தது. ஆகவே, தாயின் அழைப்பை ஏற்று, அம் மாளிகையில் ஒன்றிரண்டு நாள் தங்க ஒருப்பட்டான்.