உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

35

வண்ணான் மூன்று கழுதைகளின் உழைப்பினாலும், அவற்றின் வளர்ப்புக்காகக் கிடைத்த பொன்னாலும் செல்வனாகி விட்டான்.கீரனை நன்றியறிதலுடன் வரவேற்றான்.கழுதைகளின் பேச்சு வந்ததும், வண்ணான் சிறிது வருத்தத்துடன், “அன்பரே! கழுதைகளுள் கிழக்கழுதை என்ன காரணத்தாலோ செத்துப் போய்விட்டது.அதன்பின் இரண்டாம் கழுதையைக் கூட எனக்கு மிகுதியாக அடிக்க மனம் வருவதில்லை. குட்டிக் கழுதையை ஒரு நாள் பட்டினி போடவும் நான் விரும்பவில்லை" என்றான்.

இயல்பாக வண்ணான் இரக்க நெஞ்சுடையவனா யிருந்தான். அதுகண்டகீரன் அவனைப் பாராட்டினான்.மூவரின் உண்மை வரலாற்றைக் கூறிவிட்டு, இரு கழுதைகளையும் வரவழைத்தான். மீட்டும் மனித வடிவம் தரும் செங்கீரையில் கொஞ்சம் கொடுத்தான். அவன்முன் வேலைக்காரியும் தேங்கனியும் நின்றனர். இருவரும் அவன் காலில் விழுந்து கதறி அழுதனர்.

கீரன் தேங்கனியை வாரி எடுத்துத் தழுவிக் கொண்டான். வேலைக்காரிக்கும் ஆறுதல் கூறினான். “உங்களை நான் இனி தண்டிக்கப் போவதில்லை என்றவுடன் இருவர் துன்பக் கண்ணீரும் இன்பக் கண்ணீராயிற்று.

தேங்கனி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டே“அன்பரே! நான் தங்களுக்கு மனமார எந்தத் தீமையும் செய்யத் துணிவில்லை. என் தாயின் வற்புறுத்தலைத்தான் என்னால் தட்ட முடியாமற் போய்விட்டது” என்றாள்.

வேலைக்காரியும், “ஆம் ஆண்டே! உங்களை மலையில் விட்டுவிட்டு வந்தபின் அவள் ஒருநாள் கூட இரவு அமைதியாகத் தூங்கியது கிடையாது.காலையில் அவள் நனைந்த தலையணையை நான்தான் வெய்யிலில் அம்மா அறியாமல் உலர்த்தி வருவேன்” என்றாள்.

கீரன் வேலைக்காரிக்கு உடல் நிறைய நகையும் பணமும், கைநிறையப்பொன்னும் கொடுத்ததுடன் அவளை வண்ணானுக்கே மணம் செய்து கொடுத்தான். பின் அவன் மாளிகைக்குத் தேங்கனியுடன் மீண்டான்.