உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

41

அவளும் அவனை மணாளனாகப் பெற விரும்பினாள். ஆனால், தந்தையை எண்ணி அவள் அச்சமுற்றாள்.

பகலெல்லாம் அரசி தூங்குவது வழக்கம். இரவு முழுதும் அவள் கோபுர மேடையிலிருந்து நகருக்கு ஒளி கொடுப்பாள். இப்போது பகலில் நெடுநேரம் பேச்சில் கழிந்ததால், அவளால் இரா முழுதும் விழித்திருக்க முடியவில்லை. இடையில் சில சமயம் கண் உறக்கச் சோர்வால் இறுகும். அப்போது அவள் சிறிது அப்பால் சென்று தூங்கி எழுவாள். அச்சமயங்களில் நகரில் இருள் சூழும். நகர மக்களிடையே இது புதுப் பேச்சுக்கு இடம் தந்தது. பகலிலும் மாடியில் அயலார் நடமாட்டமிருப்பதைச் சிலர் கவனித்தனர்.

அரசன் செவிகளுக்கும் இந்தச் செய்திகள் எட்டின. இதன் உண்மையை ஒரு வாரத்துக்குள் கண்டு கூறும்படி அமைச்சருக்கு அவன் ஆணையிட்டான். ஒரு வாரத்துக்குள் உண்மை காணாவிட்டால். அமைச்சர் தலையை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தான்.

அமைச்சன் கவலையிலாழ்ந்தான்.

ஆனால், அமைச்சர் மகள் அமர்விழி தான் அதைக் காண வகை செய்வதாக உறுதி கூறினாள்.

அவள் நிலாச் செல்வியுடன் நயமாகப் பேசிச் செய்தி அறிய முயன்றாள். நிலாச் செல்வி தன் காதலனைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆயினும், அறையில் அடிக்கடி அவள் யாருடனோ நேசமாகப் பழகி வருவதுண்டு என்பதை அமர்விழி அறிந்து கொண்டாள். வருகிற ஆளைக் கண்டுணர அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள்.

கண்ணுக்கு எளிதில் புலப்படாத ஒரு சாயத்தை அவள் அறை எங்கும் தூவினாள். உருப்பெருக்கிக் கண்ணாடியால் மட்டும் அதைக் காண முடியும். அந்தக் கண்ணாடியால் அந்தச் சாயம் தோய்ந்த ஆடையுடையவரைத் தேட அவள் நகரெங்கும் ஆளனுப்பினாள்.