உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

49

அருகே இனஞ் சுட்டியறிய முடியாத ஒரு பெரிய மரமும் இருந்தன. கேணியின் நீர்த்தளம் நிலத்தளத்துடன் சரி நிரப்பிலேயே கிடந்தது. நீரின் சிற்றலைகள் நிலத்தின்மீது நெடுந்தொலை படர்ந்து அதை ஈரமாக்கியிருந்தது. இப்புதுமையைச் சிறிது நேரம் நோக்கியிருந்தபின் அவன் மரத்தை ஊன்றிக் கவனித்தான்.

அம்மரத்தின் வேர்கள் கருநிறமாயிருந்தன. அடிமரம் துருவேறிக் கிடந்த இரும்பு போல இருந்தது. கிளைகளில் பசும்பாசி அடைந்திருந்தது. இலைகள் அரை நிலாவொளியில் வெண்மையாகப் பளபளத்தன. கனிகள் மட்டும் இல்லை.

கட்டாயம் இந்தக் கேணியிலும் மரத்திலும் நாம் தேடி வந்த புதுமையின் துப்பு ஏதாவது துலங்கக் கூடும் என்று அவன் எண்ணினான். வேறு தங்க இடம் இல்லாததால், அவன் அம்மரத்தின் மேலேறி அகலக் கொப்பு ஒன்றில் அமர்ந்தான்.

தனிமையும் தங்கும் இடத்தின் வாய்ப்புக் கேடும் அவன் தூக்கத்தைக் கெடுத்தன. அவன் கண் கேணியின் மீதிருந்தது. அவன் சிந்தனைகள் நாற்புறமும் சென்று ஓய்ந்தன.

சரியாக நள்ளிரவு நேரம். அவன் விழித்திருந்தானோ, அரை உறக்கம் உறங்கினானோ என்று அறுதியிட முடியா நிலையிலே ருந்தான்.அப்போது நீரில் வட்ட வட்ட அலைகள் பரந்தன. அவை வங்கம், பொன், செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய பல நிற அலைகளாக அவன் கண்களுக்குத் தெரிந்தன. அவன் கருத்து முற்றிலும் விழிப்படைந்தது.

ஆனால், அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை.

கேணி மையத்திலிருந்து ஒரு நீண்ட கழி எழுந்தது. அது கிணற்றின் ஓரம் வரை வளைந்தது; பின் அது நெளிந்தது. அது ஒரு பாம்பின் கோர வடிவம் என்பதை அவன் அப்போதுதான் கண்டான். அவன் உடல் நடுங்கிற்று. மரக்கிளைகளை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

திடுமென ஒரு பேரொளி கேணி நீர் மீதும் நிலத்தின் மீதும் பரந்தது. அதன் ஒளியில் நீரும் நிலமும் அவற்றில் படிந்த தூசிகளுங்கூட நன்றாகத் தெரிந்தன. அவ் ஒளி பாம்பின் வாயிலிருந்த ஒரு மணியிலிருந்து வீசிற்று என்று அவன் கண்டான்.