உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

51

அப்புறப்படுத்த முயன்றது. படங்கொண்டு அதை ஓங்கி அறைந்து உடைக்க முயன்றது. ஆனால், சட்டியின் விளிம்பு நிலத்துடன் பொருந்தியிருந்தது. பளு மிகுதியானதால், அது அசையவில்லை. அதே சமயம் அது உடைபடவும் இல்லை. பாம்பின் உடலெல்லாம் முள்ளாலும் கத்தி அலகுகளாலும் காயப்பட்டு விட்டது. நீலக்குருதி சிந்திற்று.

தன் உயிருக்குப் போராடுவது போலப் பாம்பு ஒளி மணியை எடுக்கப் போராடிற்று. அப்போராட்டத்தில் அது வெற்றி பெறாமல், அதிலேயே மாண்டது.

சிலம்பன் சிந்தனைத் திட்டத்தின் ஒரு பகுதி நிறைவேறிற்று. அவன் மறுநாள் விடியற்காலையில் மெள்ள மரத்திலிருந்து இறங்கி வந்தான். பாம்பை மண்ணில் புதைத்துவிட்டு, மணியை எடுத்து வைத்துக் கொண்டான். பகலில் கூட அதன் ஒளி வெய்யிலுடன் போட்டியிடுவதாக இருந்தது.

மாயப் பாம்பின் முழு இரகசியத்தையும் அறிய அவனுக்கு ஆர்வம் எழுந்தது. ஆகவே அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேணியில் மூழ்கினான்.

அடித்தளத்தை எட்டியபின் அதில் தடவிச் சென்றான். அவன் எதிர்பார்த்தபடி அது கிணற்றின் அடித்தளத்துக்குள் முடியவில்லை. அது நெடுந்தொலை சென்றது. செல்லச் செல்ல ஆழம் குறைந்தது. அவன் நீர்ப் பரப்புக்குமேல் வந்துவிட்டான். ஆனால், அவன் மேலே எழுந்த இடம் நிலப்பரப்பல்ல. அது கிட்டத்தட்ட ஒரு புதிய உலகமாயிருந்தது. நிலத்தடியில் அரண்மனைகள், மாட மாளிகைகள், பூங்காக்கள் எல்லாம் இருந்தன. அவற்றைக் கண்டு அவன் வியப்படைந்தான்.

அவன் பூங்காக்களைச் சுற்றிப் பார்த்தான், மாடங்களில் புகுந்து திரிந்தான். அரண்மனையில் உலவினான். எங்கும் ஆளில்லை. இரண்டு இரவு விழித்திருந்ததாலும், அலைந்து திரிந்ததாலும், களைப்பும் அயர்ச்சியும் மேலிட்டன. அவன் அங்கிருந்த பஞ்சணையில் கண்ணயர்ந்தான்.

கலகலப்பான சிரிப்புக் கேட்டு அவன் எழுந்திருந்தான். கண்ணைக் கவரும் எழில் வனப்புடைய நான்கு நங்கையர்கள் அவனைச் சுற்றி ஆடிப்பாடியிருந்தனர்.