உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. வெண்மணி வேந்தன்

வேங்கை நாட்டரசியிடம் வெண்மணி ஒன்று இருந்தது. அதை அவள் தன் கண்மணி போலப் பேணிக் காத்து வந்தாள். அரசனும் அவளைக் கண்ணிமை போல் பாதுகாத்தான். அவளுக்கு ஒரு குறையும் இல்லாதிருந்தது. ஆயினும், பிள்ளை இல்லையே என்று அவள் வருந்தினாள்.

ஒரு நாள் வெண்மணி திடீரென்று காணாமற் போயிற்று. அவள் அதைத் தேடி அல்லலுற்றாள். ஆயினும், அது காணாமற் போன அன்றே அவள் தாய் ஆனாள். பத்து மாதங்களுக்குள் அழகு மிக்க ஓர் ஆண் குழந்தை அவளுக்குப் பிறந்தது. அதற்கு அவள் தன் வெண்மணியின் பெயரையே சூட்டினாள். வெண்மணி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தான்.

வெண்மணியின் புன்னகையில் அரசி தன் கவலைகள் யாவற்றையும் மறந்திருந்தாள். அவன் சதங்கையணிந்து ஓடியாடி விளையாடியதைக் காண, அவள் உண்ணும் உணவையே மறந்து விடுவாள். அவன் ளைஞனான பின் வில், வாள் எடுத்து வேட்டைக்குச் சென்ற போது, அவள் அரண்மனையிலிருந்து அவன் வீரத்தோற்றத்தில் பெருமை கொண்டாள்.

வெண்மணிக்கேற்ற ஒரு பெண்மணியை அரசன் நாடினான். அரசியின் மகிழ்ச்சி இன்னும் பெருகிற்று தனக்கு வரப்போகும் மருகி எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்வதில் அவள் பொழுது கழிந்தது.

வேங்கை நாட்டுக்குத் தெற்கே அருவா நாடு என்று ஒருநாடு இருந்தது. இரண்டு நாடுகளுக்கிடையே பல காடுகள் இருந்தன. வேங்கை நாட்டரசன் தூதுவர் பல நாடுகளும் சுற்றி அருவா நாட்டுக்கு வந்தனர்.