உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

59

புதிய அரண்மனையில் அவள் எந்த குறையையும் காணவில்லை. ஆனால், கணவனையே காண முடியாமல் அவள் துடித்தாள்.

வெண்மணியை எவரும் தேடிக் காணவில்லை, சின்னாளில் மெள்ள மெள்ள எழிலரசிக்கும் அவன் மறைந்த மாயம் தெரிய வந்தது.

புயலில் பட்ட தளிர்போல அவள் துடித்தாள். வெங்காற்றுப் பட்ட மென்மலர்போல அவள் வெம்பி வெதும்பினாள். வான்துளி பெறாத பயிர்போல அவள் உடல் துவண்டது. அவள் துயர்கண்ட அரசியும் அரசனும், வெண்மணியின் பிரிவால் வருந்தியதைவிட மிகுதி வருந்தினர்.

ஒருநாள் எழிலரசி திடுமென ஆணுடையணிந்து, தான் மாலையிட்ட கணவனுடைய வாளுடன் அரசன் அரசியிடம் வந்தாள். அரசனும், அரசியும் முதலில் அவளை அடையாளம் அறியவில்லை. அறிந்த போது வியப்புடன், "ஏனம்மா! ஏனிந்தக் கோலம்?” என்று கவலையுடன் கேட்டனர்.

66

என் கணவனைப் பிறர் தேடும்படி விட்டு, நான் அரண்மனை வாழ்வு வாழ விரும்பவில்லை. வீர இளைஞனை மணந்த நான் உங்கள் கவலையைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டு வாளா இருப்பதும் சரியல்ல. ஆகவே, என் கணவனைத் தேடநானே புறப்பட்டுவிட்டேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதனால்தான் ஆணுடையுடன் புறப்பட்டேன். என் கணவனையும் உங்கள் பிள்ளையையும் எப்படியும் தேடிக் கண்டு கூட்டிக் கொண்டு வந்துவிடுவேன்” என்றாள் அவள்.

மகனுடன் மருகியையும் விட்டுப் பிரிந்திருக்க அரசனும் அரசியும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எழிலரசி வற்புறுத்தியதனால் வேறு வகையின்றி அவர்கள் அவளை வாழ்த்தி அனுப்பினர்.

கணவனைத் தேடிய காரிகை காணாத காடில்லை கரையில்லை. காய்கனி கிழங்கன்றி, அவள் எதையும் உண்ணவில்லை. கானாறுகளின் நீரன்றி, அவள் எதுவும் பருகவில்லை. கல்லிலும், முள்ளிலும் நடந்து, கடும்பாறையிலும் கட்டாந்தரையிலும் படுத்து, அவள் பகலிரவு கழித்தாள்.