உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அப்பாத்துரையம் - 35

என்று மீட்டும் கேட்டான். செங்கழுநீர் கடுகு எடுக்க அறை வீட்டிற்குள் செல்ல இருந்த நிலையில், “இதாவரேன், சற்று இரு என்று கூறிச் சென்றாள். அவள் கூறியது முழுவதும் தூதன் செவியில் விழவில்லை; “இதாவரேன்” என்பது மட்டும் விழுந்தது. ஒரு சொல்லில் அவள் தனக்கு வேண்டும் பொருளைச் சொல்லிவிட்டு அகன்றதாக அவன் எண்ணினான். அவன் விரைந்து கப்பலுக்குத் திரும்பினான். செம்மேனியிடம் யாவும் கூறினான். “செங்கழுநீர் வேண்டுகிற பரிசு 'இதாவரே'னாம்” என்றான்.

>

'இதாவரேன் என்றால் என்ன பொருள் என்பது வணிகனுக்கு விளங்கவில்லை; தூதனும் இதைத் தெரிந்து கொண்டிருக்கவில்லை; ஆயினும், இதுபற்றி அவர்கள் சிந்தனை நீடிக்கவில்லை. ஏழு நாளாய் வீசாத நற்காற்று, அப்போது வீசிற்று. பாய்கள் விரிக்கப்பட்டன. கப்பல்கள் துறைமுகத்தைவிட்டு வெளியேறின.

பொருள் இன்னதென்று செம்மேனிக்குத் தெரியா விட்டாலும், அவள் சொன்ன பெயரை அவன் மறக்கவில்லை. அதை நினைவில் இருத்தும்படி அவன் அடிக்கடி 'இதாவரேன்! இதாவரேன்!' என்று உருவேற்றினான்; அடிக்கடி அதை எழுதி எழுதி மனத்திற் பதியவைத்துக் கொண்டான்; அப்பெயர் அவன் நினைவுக் குறிப்பிலும் முதல் தாளிலேயே குறிக்கப்பட்டிருந்தது.

அவன் வாணிகம் எங்கும் எதிர்பாரா வெற்றி தந்தது. கொண்டு சென்ற செல்வம் பத்திரட்டியாயிற்று. மேலும் பல விலையேறிய பொருள்களுடன் அவன் திரும்பினான். போகும் வழியிலும், வரும் வழியிலும் ஒவ்வொரு நாட்டிலும் நகரிலும் துறையிலும் அவன் "இங்கே, 'இதாவரேன்' கிடைக்குமா” என்று கேட்டான். ஆனால், 'இதாவரேன்' என்றால் என்ன என்று எவருக்கும் விளங்கவில்லை. தமிழ் வழங்கும் நிலத்திலேயே புரியாதபோது, பிறமொழி வழங்கும் நிலத்தவர் அதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

திரும்பி வரும் வழியில் மாபப்பலாம் என்ற ஒரு நகரில் கப்பல் தங்கிற்று. இங்கே, செம்மேனி ஓர் அழகிய செல்வ இளைஞனைக் கண்டான். அவனிடமும் "இங்கே யாராவது 'இதாவரேன்' என்பதை அறிவார்களா?” என்று கேட்டான்.