உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

93

அவை பூவுலகின் ஒரு கோடியிலிருந்து முட்டையிடும். ஆறாண்டுகள் பூவுலகின் மறுகோடி சென்று இரைதேடி மீளும். முட்டைகள் குஞ்சு பொரிக்கும்போது அவை அருகிலிருப்ப தில்லை. மீண்டபின் முட்டைகளைப் பார்க்கமாட்டா, குஞ்சு களையே பார்க்கும். ஆனால், அந்த மரத்தில் கூடு கட்டிய நாள்முதல், அவை முட்டைகளையும் பார்ப்பதில்லை; குஞ்சுகளையும் பார்ப்பதில்லை. அதன் மாயத்தை உணராமலே, அவை வருந்தி மாழ்கின.

இளவரசி துயிலைக் கலகல என்ற ஓர் ஓசை கலைத்தது. அவள் கண் திறந்தாள். மரத்தின் மேலிருந்த கூட்டில் நேமிக் குஞ்சுகள் துடிதுடித்துக் கூக்குரலிட்டன. அவற்றின் காரணமென்ன என்று காண அவள் சுற்று முற்றும் பார்த்தாள். உடனே செய்தி விளங்கிற்று. ஒரு கொடிய கருநாகம் கூட்டை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது. இளவரசி சட்டென வாளை உருவினாள்.பாம்பைத் துண்டு துண்டாக வெட்டினாள்.

பறவைக் குஞ்சுகளின் பதறல் கலகலப்பு இப்போது இன்பக் கலகலப் பாயிற்று. அவள், ஆணுடையிலிருந்ததால், அவை அவளை ஆணென்றே கருதியிருந்தன. “அண்ணா, தாங்கள் செய்த உதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? ஆயினும், எங்கள் தாய் தந்தையர் வரும் நேரமாயிற்று. உங்கள் செயலை அவர்கள் விளக்கமாக அறியும்வரை அவர்கள் உங்களைத் தவறாக எண்ணக் கூடும். எங்களைக் கொல்ல வந்த வேடர் என்று வீணாகத் தாக்கிவிடக்கூடும். ஆகவே, சற்று மறைவில் இருங்கள். அவர்களிடம் நாங்கள் பேசியபின் அழைக்கிறோம்” என்று குஞ்சுகள் கூறின.

இளவரசி அப்படியே மறைந்திருந்தாள். நேமிப் பறவைகள் வந்ததும் வழக்கம்போல் வெறுங்கூட்டைப் பார்க்காமல், குஞ்சுகளின் கலகலப்பைக் கண்டு அகமகிழ்வுற்றன. குஞ்சுகளும் கொஞ்சிக் குலவின. தமக்கு நேரவிருந்த இன்னலையும் பிழைத்த வகையையும் அவை எடுத்துரைத்தன. இளவரசியைக் காண நேமிப் பறவைகள் அவாக் கொண்டன.

இளவரசி வெளியே வந்தாள்; பறவைகள் அவளுக்கு உலகின் மறுகோடியிலுள்ள அமுதக் கனிகள் அளித்தன; அத்துடன் தம் தெய்வப் பார்வை மூலம் அவளைப்