உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பாண்மரம்

சேர சோழ பாண்டியர்கள் நெடுங்காலம் தமிழகத்தை ஆண்டார்கள். சிற்றரசர்களான வேளிர்கள் அவர்களுடன் போட்டியிட்டுத் தமிழை வளர்த்தார்கள். ஆனால், திடீரென இந்நிலை மாறிற்று. களப்பிரர் என்ற கல்லாமாக்கள் எங்கும் பரந்தனர். மூவரசுகள் அழிந்தன. வேளிர் நிலை குலைந்தனர். தமிழ்ப்புலவர் தட்டுக்கெட்டனர். பாணரும், விறலியரும் வாட்டமடைந்தனர். சில நாட்களுக்குள் இவ் இருவகையினரும் அருகிப் போயினர்.

பாணருள் கிட்டத்தட்டக்

கடைசிப் பாணனாக

வாழ்ந்தவன் பழனக் கிழான். அவன் பாடிப் பிழைப்பதைக் கைவிட்டான்.பாடுபட்டுப் பிழைக்கவும் பழகவில்லை. ஆயினும், அவனிருந்த பண்ணையின் தலைவன் பழங்குடிப் பெருமையை எண்ணி, அவனுக்கு ஆதரவு செய்தான். இடையே பண்ணை கைமாறிற்று. புதிய தலைவனைச் சென்று காணும்படியும், பரிசு பெற்று வரும்படியும் பாணன் மனைவி பூவணி அவனை வற்புறுத் தினாள். ஓர் எலுமிச்சம் பழத்துடன் அவன் புறப்பட்டான்.

புதிய தலைவன் புதுமரபைச் சேர்ந்தவன். அவன் எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டான்.“இன்னொரு சமயம் வா” என்று அனுப்பிவிட்டான்.பழனக்கிழான் அடிக்கடி சென்று பார்த்தான். பழைய மரபை எண்ணி அரைகுறையான பாடல்கள்கூடக் கட்டிக் கொண்டு போனான். ஆனால், புதிய தலைவன் பாடுபடுபவருக்குக் கூலியைக் குறைத்துக் கொடுக்க எண்ணியவன். “பாட்டில் காலமெல்லாம் போயிற்று. வேறு தொழில்பார்" என்று அவன் அழுத்தமாகக் கூறி அனுப்பி

விட்டான்.

பழனக்கிழானுக்கும் பூவணிக்கும் வறுமை, தன் கோர உருவைக் காட்டத் தொடங்கிற்று.

=