உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

99

அணுகினான். எல்லா மரத்தடிகளிலுமே பேய் போன்ற வடிவங்கள் தெரிந்தன.புங்கமரத்தடியிலே வடிவங்கள் இன்னும் மிகுதியாயிருந்தன. மேலும், அவை அப்போதே ஊளையிடவும், அலறவும் தொடங்கியிருந்தன. அவன் கைகால்கள் அவனை அறியாமல் நடுங்கின. பற்கள் நெறுநெறென்று ஆட்டங் கண்டன. ஆயினும் ஆறுவேலி ஆசை அவனைப் பிடித்து உந்திற்று.

புங்கமரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் பூவரச மரம் ஒன்று இருந்தது. அதனருகே செல்வதற்குள், பாணன் உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு தாளத்தில் ஆடத் தொடங்கிற்று; அவனால், ஒரு காலடிகூட எடுத்து வைக்க முடியவில்லை; அந்த மரத்துடன் மரமாகச் சாய்ந்து அதையே பற்றிக் கொண்டு நெடுநேரம் நின்றான்.

"பால் சான்ற புலவனே, ஏன் இந்த நடுக்கம்?” என்று ஒரு குரல் அவன் செவியில் பட்டது.

அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரும் தென்படவில்லை. பேசியது மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிய ஒரு பேய்தான். அதைக் கண்டதும் அவன் அச்சம் பன்மடங்கு பெருக்க மடைந்தது. அவன் வாய் அவனை அறியாமல் குளறிற்று.

பேய் அவனை இரக்கத்துடன் பார்த்தது. “பாணனே! என்னைக் கண்டு அஞ்சாதே. நான் பேயானாலும் அரசப் பேய். பாணர்களுக்கு வாரிக் கொடுத்தவன்தான் நான். என் பெயர் நன்னன். ஆனால், நான் பாணர் பழிக்கும் செயல் செய்து விட்டேன். அதனால்தான் பேயாயிருக்கிறேன். நான் உனக்கு என்னாலான உதவி செய்கிறேன். அஞ்சாமல் வந்த காரியத்தைக் கூறு” என்றது.

அவன் நடுக்கம் ஒரு சிறிதே குறைந்தது. “நான் பாடலைக் கைவிட்டு வாழ்கிறேன்.பாடினாலும் கொடுப்பார் தமிழ்நாட்டில் இல்லாமல் போய் விட்டனர். வறுமையால் வாடுகிறேன். ஏழுநாள் நான் பட்டினி. பதினாலுநாள் என் மனைவி பட்டினி. இந்நிலையிலும் தலைவன் என்னையோ, என் பாட்டையோ பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்தப் புங்கமரத்தில் இரவில் யாராவது ஒரு கிளை ஒடித்துக் கொண்டுவந்தால், ஆறுவேலி நிலம் தருவதாகக் கூறுகிறான்; அந்த ஆசையால், உயிரை