உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 35

(100 வெறுத்து வந்தேன்; ஆனால், அச்சம் சாகாமலே என்னைச் சாகடிக்கிறது” என்றான்.

அரசப்பேய் அவன் முன் ஒரு கனியை நீட்டிற்று; “இஃது அரசன் அரண்மனையிலுள்ள மாங்கனி; முதலில் இதைத் தின்று பசியாறு. நீ எங்கும் போக வேண்டாம்; எதற்கும் அஞ்ச வேண்டாம். நானே உனக்கு வேண்டிய கிளை முறித்துத் தருகிறேன். அந்தப் புங்கமரத்துப் பேய்கள் கொடாதவர்களைப் பாடிய பாணர்களின் பேய்கள்தாம். அவை நான்சொன்னபடி கேட்கும்” என்றது.

பழனக்கிழான் மாங்கனியை மெல்லக் கை ஏந்தி வாங்கினான். அதைத் தின்றதே அவன் உடலில் தெம்பு வந்தது. பசிமட்டுமல்ல, அச்சமும் பெரிதளவு அகன்றது.

அரசப்பேய் புங்கமரத்தை நோக்கிச் சென்றது. கீச்சுக் குரலிலே, “மன்னன் வாழ்க, எம் தலைவன் வாழ்க!” என்ற கூச்சல்கள் காதைத் துளைத்தன. பாணப் பேய்கள் அரசப் பேயைச் சூழ்ந்து நின்று ஆடின.

"பேய்த் தோழர்களே! என் பழியையும் உங்கள் பழியையும் பேயுருவிலேயே நீக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது.அதோ என் மரத்தடியில் நிற்பவன் ஒரு பழைய பாணர் குடியான்; வறுமையால் அவன் வாடுகிறான்.பாணர் காலம் உலகில் ஓய்ந்து போய்விட்டது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாடலுக்குக் கொடை தராத ஒரு செல்வன், இந்தப் புங்கமரத்தின் கிளை ஒன்றுக்கு ஆறுவேலி நிலம் கொடுக்க விரும்புகிறானாம்! ஆனால், நாம் உலவும் இராப்போதிலேயே அதை முறித்துக் கொண்டு வரவேண்டுமாம்! பாணன் இதற்காக உயிரை வெறுத்து நம்மிடம் வந்திருக்கிறான். அவனுக்குத் தீங்கு செய்வதால் நம் பேய் உருவம் இன்னும் நீடிக்கும். உதவினாலோ கூடிய விரைவில், நாம் இந்தப் பழி சூழும் வடிவத்தை விட்டு நீங்குவோம். என்ன சொல்கிறீர்கள்?” என்று அரசப் பேய் பேசிற்று.

“எங்கள் அரசன் சொல்கிறபடியே செய்வோம். என்ன செய்ய வேண்டும்? என்று பேய்கள் கேட்டன.

"தற்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம்தான். அவனிடம் கொடுக்கும்படி என்னிடம்,