உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

107

மேடையிலிருந்து கோயிலின் உட்புறம் நன்கு தெரிந்தது. ஏனென்றால், மேல்மாடம் பலவிடங்களிலும் இடிந்து கிடந்தது. உள்ளே காளியுருவின் முன்னிலையில் ஒரு சித்தர் உருவம் அறிதுயிலில் இருந்தது. அவர் உடல் எலும்பாகத்தான் இருந்தது. ஆனால், இரும்புக் கம்பிகள் போலவும் பாம்புகள் போலவும் அவர் நாடி நரம்புகள் அந்த எலும்பைச் சுற்றிப் பின்னிக் கிடந்தன. மனிதத் தன்மை கடந்த அவர் வலுவை அவை சுட்டிக்காட்டின. அவர் எவ்வளவு நேரம் அறிதுயில் நிலையில் இருந்து வருகிறார் என்று கூற முடியவில்லை. ஆனால், அவர் உடலின் தூய்மையி லிருந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது சில தடவையாவது அவர் அறிதுயில் கலையுமென்றே தோன்றிற்று.

முதல் யாமத்தில்

வணிகன்

மகன்

செம்பியன்

காவலிருந்தான். மற்றவர்கள் தூங்கினார்கள்.

உறக்கம் வராமலிருப்பதற்காக அவன் ஒன்றிலிருந்து நூறு, ஆயிரம் வரை எண்ண முயன்றான். கணக்குகள் போட்டுப் பார்த்தான். கண்கள் இறுகுவதை இவை நிறுத்தவில்லை. அவன் சுற்றியுள்ள காட்சிகளில் கருத்துச் செலுத்தினான். சித்தர் அறிதுயில் நிலை அவன் கண்களைக் கவர்ந்தது. அதையே அவன் கூர்ந்து கவனித்தான். அவர்முன் கவர்க்கோல்போல ஏதோ ஒன்று கிடந்தது. அவன் அதை ஊன்றிக் கவனித்தான். அஃது ஓர் எலும்பு. அது யாரோ ஒரு மனிதனின் எலும்பாகவோ அல்லது ஏதோ ஒரு விலங்கின் எலும்பாகவோ இருக்க வேண்டும் என்று அவன் மதித்தான்.

“அஃது ஏன் அவர்முன் கிடக்கவேண்டும்? அஃது அவருக்கு எவ்வாறு பயன்படக்கூடும்? அஃது அவர் தின்னும் உணவின் எச்சமிச்சமாய் இருக்கக் கூடுமோ?" என்று அவன் பலவாறு சிந்தித்தான்.

அவன் சிந்தனைக்கு முடிவு காணவில்லை. ஆனால், அச் சிந்தனை அவன் உறக்கத்தைத் தடுத்து, நேரத்தைப் போக்க மிகவும் உதவியிருக்க வேண்டும். ஏனென்றால், அவன் யாமத்தின் முடிவு நெருங்கிவிட்டது. யாமத்துக்கு அடையாளமாக, அவர்கள் குறித்து வைத்திருந்த விண்மீன் கிட்டத்தட்டக் கால்வட்டத்தை அணுகி வந்தது.