உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

143

என்னைப் பாறையின் அருகுக்கு அப்பால் தொங்கும்படி செய்து அதன்பின் கைக்கட்டு மட்டும் அவிழ்த்தனர். சாகிறவன் அகப்பட்டதைப் பற்றுவதுபோல நான் பாறை விளிம்பைப் பற்றினேன். அவ்வளவுதான். அவர்கள், தம் பிடியை விட்டு விட்டனர். நான் இரங்கத்தக்க நிலையில் வெட்டவெளியில் ஒரு விரல் பிடியை மட்டும் பற்றுக்கோடாகக்கொண்டு தொங்கினேன். ‘வலிவாகப் பிடித்துக்கொள் ஹார்வி' என்று தொலைவிலிருந்து அவர்கள் பேசிய குரல்தான் அவர்கள் சொல்வதை எனக்கு அறிவித்தது.

என் வாய் மூடப்பட்டிருந்தது. நான் வாய்விட்டுக் கதறமுடியவில்லை! என் கண் மூடியிருந்தது. நான் எதுவும் பார்க்க முடியவில்லை.

வேறு உணவை நாடிச்செல்லும் பூனை, அடித்த எலியை விட்டுவிட்டுப் போவதுபோல் அவர்கள் போனார்கள். இதை விடச் சுட்டிருந்தால், தூக்கிலிட்டிருந்தால் எத்துணையோ நன்றாயிருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். என் கை நரம்புகளின்மீது உடலின் பளு முழுதும் தாக்கினதால் அவை 'விண்விண்' என்று தெறித்தன. பின் தோளும் தலை நரம்புகளும் விம்மி அதிர்ந்தன.காதுகள் இரண்டிலும் வண்டுகள் குடைந் தாற் போன்ற இரைச்சல் உண்டாயிற்று. குருதி தலைக் கேறுவதா லுண்டான இந்த இரைச்சல் நின்றபின் கையிரண்டும் மரத்துப் போவது போன்ற உணர்ச்சி தொடங்கிற்று. எங்கே கைநரம்புகள் முற்றிலும் செயலற்றுவிட்டால் விழுந்துவிடப் போகிறேனோ என்ற கிலி ஒவ்வொரு கணமும் என்னை வாட்டி வதைத்தது.

உடல் பாதி செத்துவிட்டது; ஆனால், சாகும் மனிதன் வேகத்தில் நாடி நரம்புகளும் மூளையும் வேலை செய்தன. என் வேதனைப்பட்ட உள்ளம் லூஸியிடமும் குழந்தையிடமும் சென்றது. 'அவர்கள் என்ன துன்பப் படுகிறார்களோ? யார் அவர்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களோ? ஆதரவு செய்பவர்கள் யாரோ? அந்தோ லூஸி. என்னை மணப்பதற்கு மாறாக வேறு யாரையேனும் மணந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே' அவள் நாள்தவறாமல் இந்த வேலையை விட்டொழித்துவிடு என்றாளே! கேட்டோமா? 'இன்று போக வேண்டாம் என்றாளே. அவள் சொற்படி வராதிருந்திருந்தால்....