உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

207

கடித்துப் பார்த்தன. உயிரின் அடையாளம் சிறிது கூட இல்லை. அரசு செத்துக் கிடக்கிறது என்று கண்டதே, அவை, அதன் உடல்மீதேறி ஆரவாரம் செய்தன. “ஒழிந்தது முதலையினம், வாழ்ந்தது ஆமையினம்,” என்று நீர்ப்பரப்பு எதிரொலிக்கும்படி எக்காளமிட்டன.

'முதலையரசு எப்படிச் செத்தது? முதலையினம் எப்படி ஓடிற்று?' என்பது அவற்றுக்கு இன்னும் தெரியாது. ஆனால், தன் இனத்தவர் கூக்குரலை உள்ளிருந்து கேட்ட சேதாமை, தன் வேலை முடிந்து விட்டது என்று அறிந்து மெல்ல வெளியே வந்தது.

செத்த முதலையின் வாயினுள்ளிருந்து எதிர்பாராது வந்த சேதாமையைக் கண்டதும் ஆமைகள் வியப்படைந்தன. முதலையரசனை எதிர்த்து அது செய்த போராட்டத்தையும், மற்ற முதலைகள் ஓடியதையும் கேட்டதே ஆமையினத்தின் ஆரவாரம் நீர்மண்டலம் கொள்ளாததாயிற்று. இரண்டு ஆமைகள் சேதாமையைத் தம் முதுகிலேற்றிக் கொண்டன. முதலை யரசனின் தலைமுடியை அவை சேதாமையின் தலைமீது வைத்தன.

மற்ற ஏரிகளிலுள்ள ஆமைகளும் புதிய சேதாமையின் வீரச் செயல் கேட்டுக் கடம்பனேரிக்கு வந்தன. ஆமையுலக முழுவதும் சேர்ந்து சேதாமையைத் தம் தலைவனாகவும் அரசனாகவும் முடிசூட்டின.

ஆமையினத்தின் நலனுக்காகப் பல அறிவார்ந்த சட்டதிட்டங்களும், அமைப்புகளும், வாழ்க்கை ஒழுக்க முறைமை களும் வகுத்துக் கொடுத்து, சேதாமை ஆமையினத்துக்கு ஒரு வள்ளுவர் பெருமானாக நீடித்த அன்பாட்சியும் அறிவாட்சியும் நடத்திற்று. ஆமையினத்தின் அறிவையும் வீரத்தையும் வளர்த்து, நிலைத்த அமைதி முறைமைகளும் ஏற்படுத்தியபின், அது ஆமையுலகில் மீண்டும் குடியாட்சி நிறுவிவிட்டு மறைவுற்றது.

ஆமையினம் மீண்டும் விழாக்கள் கொண்டாடின; ஆனால், இப்போது அவற்றுக்கு அச்சம் இல்லை; அறியாமை இல்லை; பொறாமை இல்லை; பொறாமை பொச்சரிப்புப் பூசல்கள் ஏதும் இல்லை.