உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கழுதும் காம்போதியும்

கழுதையைக் கண்டால், கழுதுகளும் பேய் பூதங்களும் ஓடிப் போய்விடும் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். யாரும் மதிக்காத இந்த விலங்கைக் கண்டு கழுதுகளும் பேய்களும் அஞ்சுவானேன்?

ஒரு கழுதையின் முன்னோனின் வீரச்செயலே இவ்வச்சத்துக்கு மூலகரணம் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்த அந்தக் கழுதை முன்னோனின் பெயர் காம்போதி என்பது. அதன் கண்கள் மாட்டின் கண்களைப் போல நீண்டகன்றும், மானின் கண்களைப் போல மருட்சியுடையதாகவும் இருந்தன. அதன் காதுகள் மாவிலைகளைவிட நீண்டு நிமிர்ந்திருந்தன. அதன் வால் அதன் உடலைவிட நீளமானதாகவும், நுனியில் தடித்த மயிர்க்கற்றை உடையதாகவும் இருந்தது.

கழுதைகளுக்குரிய

இயற்கையான

பொறுமை

காம்போதிக்கு இருந்தது. ஆனால், அறிவிலும் ஆழ்ந்த சூழ்ச்சித் திறத்திலும் எந்த விலங்கும் அதற்கு ஈடல்ல. அதே சமயம் அது எல்லா விலங்குகளிடமும் அன்பும் ஆதரவும் உடையதாய், எந்த விலங்குக்கும் துன்பத்தில் உதவுவதாய் இருந்தது. விலங்குகளுக்குக் கொடுமை செய்பவரைக் கண்டால் மட்டும் அது கோப வெறி கொண்டு விடும். அச்சமயம் அதன் உருண்டு திரண்ட கண்களைப் பார்க்க பயமாயிருக்கும். கோப வெறியால் காதுகள் ஊசி முனைபோல நின்று துடிக்கும். வால், சிங்கத்தின் வால்போலச் செங்குத்தாக நின்று சுழலும். அதன் தோள்வலியும் குளம்புகளின் கடுமையும், அச்சமயம் எதிரிகளின் தசைகளைச் சிதைக்கும்.