உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ||

அப்பாத்துரையம் - 35

ஒரு நாள் ஒரு பூனை, ஒரு விட்டின் புறமதில் மேலிருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தது.

காம்போதி அதை அணுகி,“ஏன் அழுகிறாய், வெள்ளைக் குட்டி! உன்னை யார் அடித்தார்கள்?” என்று கேட்டது.

“யாரும் அடிக்கவில்லை அண்ணா! இந்த வீட்டில் எலிகள் வராமல் நான் எவ்வளவோ நாள் காத்திருக்கிறேன். ஆயினும், இந்த வீட்டுத் தலைவி என் தள்ளாத வயதில் என்னை அடித்து விரட்டுகிறாள். இப்போது நான் ஓடியாடி எலிபிடிக்க முடியாதாம்! இந்த நேரத்தில் நான் எங்கே போவேன்? எனக்கு யார் உதவி செய்வார்கள்?" என்று பூனை தேம்பித் தேம்பி

அழுதது.

காம்போதி அதன் கண்ணீரைத் துடைத்தது.

"வெள்ளைக்குட்டி, நீ அழவேண்டாம். நான் இருக்கிறேன்; நீ எங்கும் போக வேண்டாம்; என் முதுகில் ஏறிக்கொள்; உன் வாழ்நாள் முழுவதும் நான் உன்னைப் பாதுகாக்கிறேன்,” என்றது.

பூனையைக் காம்போதி முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டான் வீட்டுக்குக் கொண்டுபோயிற்று. காட்டான் மனைவி முதலில் பூனைக்கு உணவு கொடுக்க மறுத்தாள். ஆனால், பூனை உண்ணும்வரை காம்போதி தானும் உண்ணமாட்டேன் என்று பிடிமுரண்டு செய்தது. இதனால் பூனைக்கு உணவு வைக்கப் பட்டது. பூனை வந்த அன்றுமுதல் காம்போதி இரட்டிப்பு மகிழ்ச்சியுடனிருந்து, இரட்டிப்பு வேலை செய்ததனால் பூனையை யாரும் அதன்பின் ஒரு தொல்லையாகக் கருதவில்லை.

காம்போதியின் கருணைக்கு ஆளான உயிர்களுள் குரங்கு ஒன்றும் இருந்தது. அது ஒரு கொப்பிலிருந்து ஆடும்பொழுது கொப்பு முறிந்து விழுந்து படுகாயமடைந்தது. மற்றக் குரங்குகள் அதை அந்த நிலைமை யிலேயே விட்டு விட்டு ஓடின. நாய் முதலிய அறிவற்ற சில விலங்குகள், அதற்கு உதவி செய்வதற்கு மாறாக, அதற்குத் தொல்லை கொடுக்கத் துணிந்தன. அந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த காம்போதி நாய்களைத் துரத்தி, குரங்கை மெல்லத் தன் தோளில் தூக்கிக் கொண்டு வந்தது. தனக்குத் தரப்பட்ட உலர்ந்த புல்லால் அதற்குப் படுக்கை உண்டு பண்ணிற்று. பூனை, அதற்கு அண்டை வீடுகளிலிருந்து உணவு திருடிக் கொண்டுவந்து கொடுத்தது.