உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆடும் பாடும் ஆடுகள்

ளைஞனான ஒரு குடியானவன் தன் வயது சென்ற தாயுடன் தொண்டகக்காட்டின் எல்லையிலுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் இளங்கொற்றன். அவனுக்கு உரிய புன்செய் நிலம் சிறிது இருந்தது. வீட்டில் அவனுக்கு இரண்டு பசுக்களும் இருந்தன. இவற்றால் கிடைத்த சிறுபொருளுடன் அவர்கள் சிறு வாழ்வு வாழ்ந்தார்கள்.

பல ஆண்டு மழையில்லாததால், புன்செய் நிலங்களில் விளைவு குன்றிற்று. வாழ்க்கை மிகவும் கடினமாயிற்று. இது பற்றி அவன் தாய், மகனிடம் ஒருநாள் குறைப்பட்டாள்."இளங்கு, நம் நிலத்தாலும் உழைப்பாலும் இப்போது பயனில்லை. நம் பசுக்களை விற்றாலல்லாமல், நாம் இப்போது வாழ முடியாது. காலம் மாறினால் நாம் திரும்பவும் பசுக்களை வாங்கிக் கொள்ளலாம்” என்றாள் அவள்.

தாயிடம் பசுக்கள் பிள்ளைகளைப் போலப் பழகியிருந்தன. இளங் கொற்றனிடமும் அவை உடன் பிறந்தவைகள் போலவே நடந்து கொண்டன. முதுகொற்றி, இளங்கொற்றி என்று தாயும் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தாள். அவற்றை விற்று விட இளங்கொற்றனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆயினும், கால நிலையில் அவனுக்கும் வேறுவழி தோன்றவில்லை. அத்துடன் தாய் சொல்லுக்கு மாறாக நடக்கவும் அவனுக்கு மனமில்லை. அவன் அவ்விரண்டு பசுக்களுடனும் மறுநாள் அருகிலுள்ள பொத்தப்பி நகரின் சந்தைக்குப் புறப்பட்டாள்.

போகும் வழியில் அவன் கண்கள் இரண்டிலிருந்தும் இரண்டு தாரைகளாகக் கண்ணீர் வடிந்தன. பசுக்கள் அவற்றைக் கண்டு, “ஏன் அழுகிறாய் அண்ணா?" என்று கேட்டன.