உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

7

அவன் மறுநாளே மறவாமல் கேட்டறிவதாக உறுதி கூறினான். இத்தடவை அவன் மறக்கவில்லை. அவன் உள்ளத்திலும் அதை அறியும் ஆர்வம் பிறந்திருந்தது. அவன் அன்று உணவை வெறுத்தான். அன்னை கனிவுடன் அவன் கவலையை அகற்ற முயன்றாள். அச்சமயம் அவன் தன் கேள்வியைக் கேட்டான்.

66 து எல்லாம் உனக்கு ஏன்? யார் கேட்கத் தூண்டினார்கள்? இதை அறிய முற்படாதே. உனக்கு அது நல்லதல்ல” என்றெல்லாம் அன்னை வாதிட்டுப் பார்த்தாள்.

ஆனால், பிள்ளையின் பிடிவாதம், பெற்றவள் அறிவை மயக்கிற்று. அவள் நீலமீனின் செய்தியைக் கூறி விட்டாள். கயற்கண்ணிக்கு அவள் விரும்பிய கண்ணி அகப்பட்டது.

இப்போது அவள் திட்டம் செயலுருவம் பெறத் தொடங்கிற்று. அவள் செயல்முறைத் திட்டம்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். அவனை ஒழித்து மாற்றாளின் கொட்டம் அடக்கத் துடித்தாள். அவள் மூளை இத்தீய வழியில் சுறுசுறுப்பாக வேலை செய்தது.

அவள் மெல்லிய சுள்ளிகளையும் வரிச்சல் கீற்றுக்களையும் சேகரம் செய்தாள். படுக்கையடியில் அவற்றை இட்டாள். படுக்கையில் கிடந்து புரண்டாள். புரளுந்தோறும் சுள்ளிகள் நெறுநெறு என்று உராய்ந்தன. எலும்பு முறித்துக் கொள்ளும் அரவம் கேட்டது.

உள்ளூர எலும்பு முறிவால் வாதைப்படுவதாக அவள் நடித்தாள். வேண்டுமென்றே உணவு உட்கொள்ளாமல் உடலை நலிய வைத்தாள். அவள் நோய் பற்றிய செய்தி எங்கும் பரந்தது. மன்னன் கவலையுடன் அவளை வந்து கண்டான். புரளும்போது ஏற்பட்ட அரவம் அவனைத் திடுக்கிட வைத்தது. தன் அரசி உயிரைக் காக்க அவன் விரைந்தான். அரண்மனை மருத்துவரை அவன் வரவழைத்தான்.

மருத்துவர் எப்போதும் அரசிக்கு உடந்தையான கையாளாயிருந்தார். மாயத்தைக் கூறாமலே, அவள் அவருக்குத் தக்க அறிவுரை தந்திருந்தாள். அவர் அவள் நாடி பார்த்தார். உடலை சோதித்தார். பின்பு அவள் கூறி வைத்தபடியே மருந்துத் தயாரிப்பதற்கான திட்டம் கூறலானார்.