உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

[227

இத்தடவை இளங்கொற்றன் துணிந்து தன் கோரிக்கையை உயர்த்தினான். முன்போல மிடா வுணவு பண்டத்துடன் இளவரசியின் கையிலிருந்த கணையாழியையும் கோரினான். கோரிக்கை சற்று மிகுதிப் படியானதாகத் தோற்றக் கூடியதானாலும், இளவரசி அதைப் புன் முறுவலுடன் தன் கையிலிருந்து கழற்றிக் கொடுத்தாள். அவள் தன் ஆடுகளை விரும்பியே தன்னை அடுத்தாலும், தன்னை வெறுக்கவில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆடுகளின் ஆடல்பாடல்களை அவள் பார்க்கும்போது, அவள் அவற்றில் மட்டுமின்றி, அவற்றுடன் தன் வயப்பட்டுக் குழல் வாசிக்கும் இளங்கொற்றன் தோற்றத்திலும் கவனம் செலுத்தியே இருந்தாள்.

இரண்டாவது ஆடு வந்த பின்பும் ஆடுகள் ஆட ஆடவோ பாடவோ இல்லை. ஆகவே, இளங்கொற்றனுக்கு மூன்றாவது தடவையாக மீண்டும் அழைப்பு வந்தது.

இளவரசியிடம் நாட்டங்கொண்ட இளங்கொற்றன் அவள் கணை யாழியைப் பெற்றதுடன் அமையவில்லை. தன்னலான மட்டும் அவளைப் பற்றிய வரலாறுகளை அறிய முற்பட்டான்.

இளவரசியின் கணையாழியில் வைரம், மாணிக்கம், மரகதம் ஆகிய மூன்று வகை மணிக்கற்கள் இருந்தன. இம் மூன்று கற்களைப் பற்றியும் ஒரு இரகசியம் உண்டு என்றும், அதை இளவரசி தவிர வேறு யாரும் அறிவதில்லை என்றும் அவன் கேள்விப்பட்டான்.

இந்த இரகசியத்தைப் பெறுபவனுக்கே இளவரசி உரியவளாகக் கூடும் என்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ உண்டாயிற்று.

ஆகவே, மூன்றாவது தடவை அவன் அழைக்கப்பட்ட போது, அவன் அவ்விரகசியத்தை அவளிடமிருந்தே அறிவது எப்படி என்ற எண்ணத்தில் ஆழ்ந்தவனாகச் சென்றான். சூழ்நிலை அன்று அவனுக்குப் பெரிதும் உதவிற்று.

இளவரசி

கவலை தோய்ந்த முகத்துடன் தனியே இருந்தாள். இளங்கொற்றன் தன் ஒரே ஆட்டினுடன் வந்ததும், அவன் புன்முறுவலை வருவித்துக் கொண்டு அவனை வரவேற்றாள்.