உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

243

7. நகை பகையை வெல்லும்

'வெம்பகை' என்றொரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் அவைக் களத்தில் கோமாளியாக இருந்தவன் மதியழகன். அவன் நகைச்சுவை குன்றாமலே அவையோர் ஒவ்வொருவரையும் தாக்கித் தலையிறங்கச் செய்வது வழக்கம். ஒரு நாள் நாக்குத் தவறி அரசனையே அவன் இறக்கிப் பேசிவிட்டான். அரசன் சட்டென வெகுண்டு, அவனைக் கொலை செய்யும் படி ஆணையிட்டு விட்டான்.

எப்போதும் கடகடவென்று பேசும் விகடன் வாளா இருப்பது கண்டு, அரசன் அவனைச் சற்றுப் பேச வைத்துத் தணிவு செய்ய வேண்டும் என்றெண்ணி, “நீ எங் கோமாளி யாதலால், உனக்கு ஒரு வகையிற் பரிவு காட்டுகிறேன். நீ எந்த வழியாகச் சாக வேண்டுமென்று விரும்புகிறாயோ, அந்த வழியிலேயே சாகலாம். ஆகவே, உன் முடிவு உன் நாக்கையே பொறுத்துள்ளது" என்றான்.

மதியழகன் உடனே முகமலர்ந்து, “அப்படியாயின், அரசே! முதுமை வழியாக நான் சாகும் படி அருளல் வேண்டும்" என்று கூறினான்.

எதிர்பாராத இவ்விடையைக் கேட்டு அரசன் வியப்பும் மகிழ்ச்சியுங் கொண்டு சினம் ஆறினான். அதன்பின் அரசன், தான் பகையரசரிடம் செலுத்தும் வன்கண்மையை அந்நகைய ரசினிடம் எந்நாளும் காட்டுவதில்லை.