உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(282)

அப்பாத்துரையம் - 35

34. நாய் காட்டிய நன்றி

குற்றாலத்தை யடுத்த தென்காசி நகரில் மருதவாணர் என்ற பெருங்குடி வாணர் ஒருவர் இருந்தார். அவரிடம் செங்கோடன் என்றோர் அரியவேட்டை நாய் இருந்தது. மருதவாணர் சூரற்கா L டடர்ந்த குற்றாலத்துக் குன்றுகளில் வேட்டையாடவும் வேடிக்கை பார்க்கவும் நாயுடன் போவது வழக்கம். குற்றாலத்துப் பருவமாகிய ஆனித் திங்களுக்கு மூன்று மாத முன்னாக மஞ்சுமூடிய நாளொன்றில் செங்கோடனுடன் சென்றவர் திரும்பி வரவில்லை. நெடுநாள் செங்கோடனைப் பற்றியும் மருதவாணரைப் பற்றியும் யாதொரு துப்பும் வாராமற் போகவே அனைவரும் இருவரையும் புலிதான் அடித்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்தினர்.

மூன்று மாதங்கடந்து சூரல் குழை வெட்டச் சென்ற ஒரு குடியானவன் மழைக்காலத் தண்ணீர் குடைந்து ஏற் பட்ட முழைஞ்சு ஒன்றின் பக்கம் ஓர் ஈனக்குரல் கேட்டு அப்பக்கம் சென்றான். தோலும் எலும்புமான உயர்தர நாய் ஒன்று, எலும்பு வற்றலாய்க் கிடந்த ஒரு பிணத்தைக் காவல் காத்து நின்றதைக்

கண்டான்.

நாயின் கழுத்துப் பட்டையால் பிணமானவர் மருதவாணரே என்று தெரிந்தது. மஞ்சு மூடியகொடும்பாறை உச்சியினின்று வீழ்ந்திறந்த அவர் உடலை, அப்பெரிய வேட்டைநாய் மூன்று மாத காலம் ஆளற்ற காட்டில் காத்து நின்றதென உய்த்துணர்ந்த அக்குடியானவன், வேறு சிலரை அழைத்து வந்து மருதவாணர் எலும்புக்கூட்டுடன் நாயையும் ஊர்கொண்டு வந்து சேர்த்தான். அவ்வெலும்பு எரிக்கப் பட்ட பின்னர், நாய் அவர் வீட்டிற்கு மீண்டது.

அதன்பின் வாரம் ஒரு முறையேனும் அந்நாய் எத்தகைய கட்டையும் அறுத்துத் தன் தலைவர் எலும்பு எரியூட்டப் பட்ட இடம் சென்று வந்ததென அந்நகரத்தார் கூறுகின்றனர்.