உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம் [291 40. கள்ளன் சிக்கினான் ஓர் அரசனுடைய அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று களவு போய்விட்டது அரண்மனையில் ஐம்பது அறுபது வேலைக்காரர்கள் இருந்தனர். எல்லோரையும் நன்கு உசாவியும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அமைச்சன் கள்ளனைப் பிடிக்க ஒரு சூழ்ச்சியைக் கண்டு பிடித்தான். மாலையில் எல்லா வேலைக்காரர்களையும் அழைத்தான். ஒரு முழ நீளம் உள்ள கழி ஒன்றை எல்லோருடைய கையிலும் கொடுத்து அவர் களைப் பார்த்து, "எல்லோரும் இக்கழியைக் காலையில் என்னிடம் கொண்டுவாருங்கள். மோதிரத்தைக் களவு செய்தவனுடைய கழி ஓரங்குலம் அதிகமாக வளரும்படி மந்திரஞ் செய்திருக்கிறேன். காலையில் எல்லாக் கழிகளையும் சரிபார்த்துக் கள்ளனைப் பிடித்து விடுகிறேன்" என்று சொன்னான். வேலைக்காரர்கள் எல்லோரும் கழியைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். மோதிரத்தைக் களவு செய்தவனுக்கு மட்டும் உறக்கமே பிடிக்கவில்லை. மந்திர சக்தியினால் தடி வளர்ந்து காலையில் நம்மைப் பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது; இத்தொல்லையிலிருந்து தப்புவதற்கு ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டுமென்று இரவெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். வைரமோதிரக் கள்ளன் மனத்தில் இரவே ஒரு சூழ்ச்சி தோன்றியது. காலையில் எழுந்தவுடன் வேறொன்றும் எண்ணாமல் தன்னுடைய கழியை எடுத்து ஓர் அங்குலத்தைக் குறைத்து விட்டு அமைச்சனிடங் கொண்டு சென்றான். அமைச்சன் எல்லோருடைய கழியையும் வாங்கிச் சரி பார்த்துக் கொண்டே யிருந்தான். கள்ளன் கழியை அளந்து