உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

293

41. குருடன் கைவிளக்கு

ஒரு நாள் இரவு ஒரு குருடன் கையிலே விளக்கோடு தெருவிற் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த ஒரு மனிதன் குருடன் விளக்கோடு செல்வதைப் பார்த்து நகைத்து, "ஓ குருடரே! உமக்குத்தான் ஒளியும் இருளும் ஒன்றாயிற்றே! அவ்வாறாக நீர் கையில் விளக்கையெடுத்துக் கொண்டு போவதனால் என்ன பயன்? கண்குருடானதோடு அறிவுகூடக் குருடாகி விட்டது போல் தெரிகிறதே" என்று சொன்னான்.

இதனைக் கேட்கவே குருடனுக்கு மிகுந்த சினமுண்டாகி விட்டது. அவன் தன்னோடு பேசிய அம்மனிதனைப் பார்த்து, “உனக்குக் கண் தெரிகிறதென்று குதிக்கிறாய்; ஆனாலும் என்ன இரவில் உனக்கும் கண் தெரியாதல்லவா? அறிவுக் கண் எனக்குக் குருடாகவில்லை. உனக்குத்தான் குருடாகிவிட்டது. என் கையிலே விளக்கிருந்தால் எதிரே வருபவர்கள் மேலே முட்டிவிடாமல் ஒதுங்கிப் போவதற்கு உதவியாக இருக்கும். இதற்காகவே நான் விளக்கெடுத்துக் கொண்டு போகிறேன். உன் அறிவுக் கண் குருடாக இருப்பதனால் அன்றோ, இச்சிறிய செய்திகூட உனக்கு விளங்காமற் போய்விட்டது என்றான். இதனைக் கேட்டு அம்மனிதன்தான் இவனிடம் வாய் கொடுத்து மாட்டிக் காண்டோமே என்று மிகுந்த நாணத்தோடு போய்விட்டான்.