உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மாணிக்க மங்கை

வேள்மாரி என்ற மன்னனுக்கு நான்கு மனைவிமார் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு புதல்வரும் இருந்தனர். புதல்வர்களுக்கு அவன் முறையே, வெள்வேல், ஒள்வேல், வடிவேல், மணிவேல் என்று பெயரிட்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏறத்தாழ ஒரு வயது ஏற்றத் தாழ்வு உடையவராயிருந்தார்கள்.

மணிவேலின் தாய் சேதாம்பல் என்பவள். அரசனுக்கு அவளே எல்லாரினும் இளைய அரசியாயிருந்தாள். மன்னன் அவளிடம் உயிரை வைத்திருந்தான். அவள் மணிவேலிடமே உயிரை வைத்திருந்தாள். ஆனால், மணிவேல் எவருக்கும் அடங்காத துடுக்குத்தனம் உடையவனாய் இருந்தான். அவனால் அரசி சேதாம்பலுக்கு ஏற்பட்ட துன்பம் பெரிது. ஆனால் பிள்ளைப் பாசம் அவளுக்கு ஒப்பற்ற பொறுமை தந்திருந்தது. எனினும், மன்னனால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் மணிவேலை நகருக்கு வெளியே ஒரு மாளிகைக்கு அனுப்பி வைத்தான். அரசி அவன் பிரிவைப் பொறாமல், தானும் அவனுடன் போய் அந்த மாளிகையில் வாழ்ந்தாள்.

மற்ற அரசியருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் மீது முன்பே பொறாமை மிகுதியாயிருந்தது. இந்தத் தறுவாயை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள்மீது அவதூறுகளைச் சுமத்தினார்கள். மன்னன் அவர்களை நிலையாக வெறுத்தொதுக்கும்படி செய்தார்கள்.

குறும்பு, துணிச்சல், துடுக்குத்தனம் ஆகியவற்றின் உருவமாகவே மணிவேல் வளர்ந்தான். கணவன் துணைகூட இல்லாமல், சேதாம்பல் அத்தனையையும் பொறாத வண்ணம் பொறுத்து வந்தாள். ஆனால், அப்போதும் அவள் தாய்ப்பாசம்