உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

33

நின்றது. பின் அஃது எதிர்த் திசையில் மாணிக்கங்களைப் பின்பற்றிச் சுழன்றது.மாணிக்கங்களை மிதக்கவிடுந்தோறும் எதிர் சுழற்சி வேகம் மிகுந்தது. சுழியினுள் படகு வந்தபடியே சுழிக்கு வெளி வந்து, முன்போல் கடல் கிழித்து மீண்டது. அவர்களை மறுபடியும் கரை கொண்டு சேர்த்தது.

அவர்கள் இறங்கிய கரை, கடலில் அவர்கள் ஏறிய கரையன்று; அது புது நாடாயிருந்தது; அன்னையுடன் மணிவேல் அதைச் சுற்றிப் பார்த்தான். நாடு இருவருக்குமே பிடித்திருந்தது. தலைநகரில் அரண்மனையின் பின்புறமுள்ள ஒரு குடிசையை அவர்கள் குடிக்கூலிக்கு அமர்த்திக் கொண்டனர். அதிலேயே மணிவேல் அமர்ந்திருந்தான். அவன் நாடோடி ஆர்வம் இனித் தணிந்து விடும் என்று சேதாம்பல் அமைந்து மகிழ்ந்தாள்.

மணிவேலுக்கு இப்போது வயது இருபதாயிற்று. ஆனாலும் அவன் விளையாட்டுப் போக்கு முற்றிலும் மாறவில்லை. அதற்கேற்ப, அந்த நாட்டு இளைஞர்களும் விளையாட்டார்வம் உடையவர்களாகவே இருந்தனர். சிறியவர்களும் பெரியவர்களும் விளையாட்டில் வேற்றுமையில்லாமல் கலந்து கொண்டிருந் தார்கள். செல்வர் வீட்டுப் பிள்ளைகளுடன் ஏழை வீட்டுப் பிள்ளைகளும் ஒன்றுபட்டு விளையாடினார்கள். மணிவேல் எல்லாருடனும் மட்டைப் பந்து, எறிபந்து, குழிப்பந்து, கோலி ஆகிய ஆட்டங்களை ஆடினான். எல்லாவற்றிலும் அவனே வெற்றி வீரனாக விளங்கினான். ஆனால், கோலியாட்ட வெற்றி ஒன்றே எல் லாரையும் அதிரடிக்க வைத்தது. ஏனென்றால், அதில் அவன் திறம் மட்டுமன்றி, அவன் கோலியின் திறமும் இருந்தது. அவன் கடலிலிருந்து கொண்டுவந்த மாணிக்கத்தையே கோலியாக வைத்தாடினான். சுண்டிவரும் மாணிக்கத்தின் முன் கோலிகள் யாவுமே தூள் தூளாக நொறுங்கின.

அந்நாட்டு மன்னன் இளநாகன் என்பவன். அவன் மகள் மருவேலி கன்னிமாடம் சார்ந்திருந்தாள். மாடத்தின் உப்பரிகை யிலிருந்து அவள் மாணிக்கக் கோலியையும், விளையாட்டையும் கண்கொட்டாது பார்த்துக் கொணடிருந்தாள். நெல்லிக்காயளவு பருமனுடைய அவ்வளவு அழகான மாணிக்கத்தை அவள் அதற்குமுன் எங்கும் பார்த்ததில்லை. அம்மாதிரி மாணிக்கம் தனக்கு வேண்டுமென்று அவள் தந்தையிடம் சென்று அடம் பிடித்தாள்.