96
அப்பாத்துரையம் – 37
அவன் தன் தந்தையின் பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சுருகினான்; தன் தந்தையைக் கடவுள்போலப் போற்றி வணங்கினான். அவன் நல்லொழுக்க நெறி தவறாதவன்; மானம் உடையவன்; ஆதலால், தன் தாய் செய்த அடாத செயலை எண்ணி எண்ணி மனம் நொந்தான். தந்தை இறந்தது பற்றித் தீராத் துயரம் ஒருபுறம்; தாயின் மறுமணம் பற்றி நீங்காத வெட்கம் ஒருபுறம்; இவற்றால் அந்த இளைஞனுடைய வாழ்வில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.அவன் அகத்தின் மகிழ்ச்சி அறவே தொலைந்தது; முகத்தில் கவலைக் குறிகளே மிகுந்தன. நவில்தொறும் நயம்பயந்த நூற் கல்வியிலும் அவனுக்கு இன்பம் இல்லை. அரசிளங்குமரர்க்கு இயல்பான வேட்டையிலும் விளையாட்டிலும் அவனுக்கு இன்பம் இல்லை. உலக வாழ்க்கையில் அவனுக்குச் சலிப்புத் தோன்றிப் பெருகியது. தனக்குக் கிடைக்க வேண்டியதான அரசுரிமை கிடைக்காமற் போனதே என்று அவன் வருந்தினான் அல்லன். அவன் வருத்தத்திற்கு உண்மையான காரணம் வேறு. அன்பும் அருளும் நிறைந்த தன் தந்தை உயிருடன் இருந்த போது, அவர்தம் வாழ்க்கைத் துணையாய் இருந்து மலரும் மணமும் போலப் பிரியாது வாழ்ந்துவந்த தன்தாய், அவர் இறந்த சில வாரங் களுக்குள், நெறிதவறி மைத்துனனை மணம் புரிய விழைந்து, உண்மையும் நம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, சிறிதும் தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டனளே என்ற எண்ணமே அவன் வருத்தத்தின் காரணம். இதனால்தான் அவன் அகமகிழ்ச்சி முற்றும் அழிந்தது. பத்துப்பெரிய நாடுகளை இழப்பதனாலும் அவன் இவ்வளவு சோர்வும் கவலையும் அடைந்திருக்கமாட்டான்.
அவனுடைய மனக்கவலையை மாற்றக் கெர்ட்ரூடும் கிளாடியஸும் எவ்வளவோ முயன்றனர். அவர் தம் முயற்சிகள் வீண் ஆயின. தந்தை இறந்த போது உடுத்த கரிய உடையை அவன் ஒருநாளும் களையவில்லை. தாய் மறுமணம் செய்துகொண்ட அந்த நாளிலும் அவன் அந்த உடையே அணிந்திருந்தான்.
அந்த நாள் தன் குடும்பத்தின் மானம் அழிந்த நாள் என்றே அவன் கருதினான். பிறகு நடந்த களியாடல்களிலும் விழாக் களிலும் அவன் கலக்கவேயில்லை.