உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(150) அப்பாத்துரையம் - 37 அயாக்கிமோ என்பவனும் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டாள்.ஆனால் அவன் கையில் பாஸ்துமஸுக்குத்தான் கொடுத்த வைரக்கணையாழி இருப்பது கண்டு அவளுக்குச் சொல்லொணா வியப்பு ஏற்பட்டது. அதில் ஏதோ சூதிருக்கிறதென்று அவள் உடனே உணர்ந்து கொண்டாள். அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்று அவள் மனம் விரைந்து பதைத்தது. இமொஜெனை அங்கே வேறு சிலரும் அறிய இடமிருந்தது. அவளுக்கு ஆணுடை கொடுத்த பிஸானியோ அவர்களுள் ஒருவன். பெலாரியஸும் இளைஞரும் அவளைக் கண்டு கொண்டனர்; ஆயினும் இறந்தவள் எப்படி வந்தாள் என்றும், ஏன் பேசாதிருக்கிறாள் என்றும் அறியாது விழித்தனர். 9. முடிவு எங்கும் கவலையும் விழிப்பும் ஆர்வமும் நிறைந்த இந்நிலையில், திருவருள், ரோம் படைத்தலைவன் லூஸியஸின் நாவில் வந்திறங்கியது.அவன், 'அரசே! நான் ரோம் நாட்டவன். என்னை நீங்கள் கொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தெரிந்ததும் நான் உயிருக்கு மன்றாடப் போவதில்லை. ரோமர்கள் சாவுக்கு அஞ்சார். ஆனால், எனக்காக ஒன்றுங் கேட்க வேண்டுவதில்லை யாயினும், பிறருக்காக ஒன்று கேட்க விரும்புகிறேன். இதோ இப்பையன் (இமோஜெனைச் சுட்டிக்காட்டி) ரோம் நாட்டான் அல்லன்; பிரிட்டானியனே, அவன் உண்மையுடையவன். அவன் பிரிட்டனுக்கு எதிராகச் சண்டையிற் சேர்ந்தவன் அல்லன். ரோமன் கையிற் சிறைபட்டு அதனால் அவனுக்கு உழைத்தவன். அவனைப்பாதுகாப்பீராக!" என்றான். "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" என்பதற் கிணங்க ஸிம்பலின், இமொஜெனை இன்னாள் என அவளது ஆணுருவில் அறியாவிடத்தும் இயற்கையான பாசத்தின் உந்துதலால் அவளைப் பார்த்து, "உன்னைப் பார்க்க, நான் உன் உயிரைத் தருவதென்பது மட்டுமன்று; நீ வேண்டும் வேறு ஒருவரது உயிரைத் தருவதற்குங்கூடத் தயங்க மாட்டேன்" என்றான்.