சேக்சுபியர் கதைகள் - 2
249
குறிப்புக்களையும் பற்றியே கனாக் கண்டுகொண்டிருந்த ஜூலியட்டின் காதிலும் இது விழுந்தது. அப்போது அவள்முகம் சட்டென நகையிழந்து கவலையுள் ஆழ்ந்தது. ‘அந்தோ, எனக்கும் என் காதலுக்கும் இடையே மாந்தர் கட்டியகோட்டைகள் எத்தனை உள்ளன!' என்று ஏங்கினாள் அவள்.
பண்டை நாள் தொட்டே காதல், கடலும் மலையும் கானாறும் கடக்கும் திறனுடையதாக விளங்குகின்றது. அது காலம் இடம் என்பவற்றின் கட்டறுத்த கடவுளின் ஒரு சிறு பதிப்பு ஆதலின், அவரைப் போலவே இச்சிறு வாழ்க்கையளவில் அது காலமும் இடமும் கடந்து நிற்கின்றது. அதன் வயப்பட்டோர்க்கு இரவும் பகலும் ஒன்றுதான். காடும், நாடும் முள்ளும் மலரும் ஒன்றுதான்.
உலகத்திற்கு ஒரு பகல் சென்றது. உலகத்தார்க்கு ஓர் இரவு வந்தது. தூங்கும் உயிர்களுக்கு அது நள்ளிரவுப்போது. ஆனால், ரோமியோவுக்கு ஜுலியட்டின் நினைவே ஞாயிறாய் இருந்தது. அந்நினைவு மாறாத அவனுக்கு இரவேது? ஞாயிறு படிந்ததையும், மதி உயர்ந்ததையும் அவன் அறியவில்லை.அப்படி ஜூலியட்டே நினைவாக மனதுட் கொண்டலைந்தான்.
அவன் உள்ளம் ஜூலியட்டைச் சுற்றி வட்டமிட்டது.அவன் கால்களும் அவனையறியாமலே கப்பியூலத்தின் மாளிகையைச் சுற்றி வட்டமிட்டன. மாளிகையின் பின்புறம் ஒரு தோட்டம். அதன் மதில்கள் இரண்டாள் உயரம் ஓங்கி நின்றிருந்தன. தன் காதலி இருப்பது அதன் மறுபுறம் என்று மனதுள் நினைத்தான். உடன் அம்மனமும் அதனைப் பின்பற்றி அவனுடலும் தாமே அம்மதிலைத் தாண்டிக் குதித்தன. தோட்டத்தில் யாரேனும் இருப்பாரோ என்று எண்ணிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். அந்நள்ளிரவில் அங்கு யார் இருப்பர்? கொஞ்ச நேரத்திற்குள் தோட்டங் கடந்து மாளிகையின் பின்புறத்தை அடைந்தான். அதன் பலகணி தலைக்கு மேலாகச் சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன் சித்திர வேலைப்பாட்டினால் அதுவே பெண்டிர் பகுதி எனக் கண்டான். அதன் உட்புறமே அவனது காதற்கனி தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதனைப் பற்றி எண்ணிய தான் இப்படி வெளியே நிற்பதை எண்ணி வருந்தினான்.
கு