உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

||--

அப்பாத்துரையம் - 37

சொல்லும் கெடு நாள் கடந்தால், நீ விரும்பும் அபராதம் வாங்கிக் கொள்” என்று அந்தோனியோ கடுகடுத்துக் கூறினான்.

உடனே ஷைலாக் தன் பேச்சினை மாற்றிக்கொண்டான்; "என்ன ஐயா, பொறுத்துப் பேசக்கூடாதா? உன்னோடு நட்பு முறையில் பழக நான் பேராவல் கொண்டிருக்கிறனே. நீ செய்த தீங்கை நான் மறந்து விடுகிறேன். கடனுக்கு வட்டி அரைக்காசும் வேண்டாம். பத்திரம் எழுதிக்கொடுத்தால் போதும். அதில் ஏதேனும் ஒரு கெடுவைக் குறிப்பிட்டு, கெடுநாள் கடந்தால் உன் உடம்பில் எந்தப் பகுதியிலிருந்தாவது ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடுக. கெடுநாள் கடந்தாலும் கவலை வேண்டாம்," என்று கூறி நண்பனைப்போல் நடித்தான்.

அந்தோனியோ அந்தக் கட்டுப்பாட்டிற்கு இசைந்தான். பஸானியோ அவ்வாறு எழுதிக்கொடுத்துத் துன்பம் தேடிக் கொள்ளல் ஆகாது என்று தடுத்தான். “நாம் ஏன் அஞ்ச வேண்டும்? இன்னும் சில நாட்களுக்குள் நம்முடைய கப்பல்கள் திரும்பி வருதல் திண்ணம் அன்றோ? இந்தத் தொகை மூவாயிரந்தானே! முப்பது ஆயிரம் என்றாலும், முந்நூறு ஆயிரம் என்றாலும் நம்மால் தரமுடியுமே!" என்று கூறினான். “கிறித்தவர்களாகிய இவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை போலும்,” என்று சொல்லிக்கொண்டு, ஷைலாக்பஸானியோவைப் பார்த்து, “பஸானியோ! ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? கப்பல்கள் வருதல் உறுதியாயிருக்கும்போது, கெடு தவறக் காரணம் என்ன? ஒருகால் தவறினாலும், நான் கட்டுப்பாட்டை வற்புறுத்துவேனா? அதனால் நான் பெறக்கூடியது ஓர் இராத்தல் தசை-அதுவும் மனிதன் தசை. அதனால் பயன் என்ன? வேடிக்கையாகக் கூறிய கட்டுப்பாட்டைக் கேட்டதும் இவ்வளவு நடுக்கமா? விருப்பமானால் எழுதிக் கொடுக்கலாம்" என்று நயவஞ்சகமாகப் பேசினான்.

இப்பேச்சினால், பஸானியோ ஏமாறவில்லை. அந்தோனி யோவைத் தன்னால் இயன்றவரை தடுக்கமுயன்றான். ஆனால், வேடிக்கையான கட்டுப்பாடு என்று நம்பின அந்தோனியோ பத்திரம் எழுதிக்கொடுத்துப் பணம் வாங்கி நண்பனிடம் கொடுத்தான்.