உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அப்பாத்துரையம் – 37

இருபது பங்கு வேண்டுமானாலும், எடுத்துக்கொண்டு செல்க, ஆனால் அதற்குள் நமது திருமணம் நடைபெறல் வேண்டும். திருமணம் முடிந்தால், உமது விருப்பம் போல் இச்செல்வத்தைச் செலவிடலாம்,” என்று கூறித் திருமண ஏற்பாடுகளைச் செய்வித்தாள். திருமணங்கள் இரண்டும் முடிந்தன.பஸானியோ கிராஷியானோவுடன் வெனிஸ் நகரத்திற்கு விரைந்து சென்றான்.

4. போர்ஷியா முறைமன்றம் ஏகுதல்

அங்கு அந்தோனியோ சிறையில் வைக்கப்பட்டிருத்தலை அவன் கண்டான்; மனம் நொந்து ஷைலாக்கிடம் ஓடினான்; கடன் தொகையை விடப் பன்மடங்கு கொடுப்பதாகக் கூறிப் பன்முறை வேண்டினான். அந்த யூதனோ மனம் இரங்கவில்லை. "இனி எனக்குப் பணம் எதற்காக? ஓர் இராத்தல் தசையே வேண்டும்," என்று அவன் வற்புறுத்தினான். பஸானியோவின் முயற்சிகள் எல்லாம் வீணாயின.

வெனிஸ்மன்னன் இவ்வழக்கை ஆராய்வதற்காக ஒருநாள் குறித்திருந்தான். அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டு பஸானியோ அங்கே வருந்திக் கொண்டிருந்தான்.

தன் கணவன் பிரிந்தபிறகு, போர்ஷியா வாளா இருக்க வில்லை. “என்ன செய்யலாம் எவ்வாறு அந்தோணியோவைக் காப்பாற்றக் கூடும்,” என்று அவள் எண்ணி எண்ணி ஒரு முடிவுக்கு வந்தாள். அவள் தன் உறவினராகிய பெல்லாரியோ என்னும் வழக்கறிஞர் ஒருவர்க்குச் செய்தி எல்லாம் எழுதினாள்; அவருடைய கருத்தையும் தக்க வழிகளையும் அறிவிக்குமாறும் வழக்கறிஞர் உடையைக் கொடுத்தனுப்புமாறும் வேண்டினாள். அந்தக் கடிதத்தை ஒருவன் அவரிடம் சேர்த்து, உடனே உடையும், பதிலும், தனிக் கடிதம் ஒன்றும் பெற்றுக் கொண்டுவந்தான். இவற்றைப் பெற்ற போர்ஷியா மகிழ்ந்தாள்.

அவ்வுடைகளை அவள் அணிந்துகொண்டாள். தோழி நெரிஸாவுக்கும் ஆண் உடைகளை அளித்துத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெனிஸ் நகரத்தை அடைந்தாள். அரசன் அவ்வழக்கை ஆராய்வதற்காகக் குறித்த நேரத்தில், முறை மன்றத்தை அடைந்தாள். தன் உறவினர் பெல்லாரியோ கொடுத்த தனிக்கடிதத்தை அரசனிடம் சேர்ப்பித்தாள்.