உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

19

வாழ்வாயாக. நீ நல்லவழிக்குத் திரும்புவாயானால், உன் செல்வத்தின் மற்றப்பகுதி உனக்கே திருப்பி அளிக்கப்படும்,” என்று அரசன் கூறினான். ஷைலாக் முறை மன்றத்தை விட்டுச் சென்றான்.

6. கணையாழியால் வந்த பிணக்கமும் இணக்கமும்

உடனே, அரசன் அந்தோனியோவை விடுதலை செய்து விட்டு பல்தசார் என்று பெயர்பூண்ட வழக்கறிஞரைப் புகழ்ந்து பேசித் தன் வீட்டிற்கு விருந்தினராக வருமாறு அழைத்தான். தான் விரைந்து திரும்ப வேண்டியிருப்பதாகவும் வரமுடியாமைக்கு வருந்துவதாகவும் கூறி, அப்பொழுதே போர்ஷியா விடைபெற்றுச் சென்றாள். பஸானியோ அவளைத் தொடர்ந்து சென்று, “ஐயா! தங்களுடைய அரிய உதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? ஷைலாக்குத் தரவேண்டிய தொகையைத் தாங்கள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்,” என்று சொல்லி அத்தொகையைக் கொடுக்க முயன்றான். அந்தோனி யோவும் தனது நன்றியறிதலைக் கூறினான். போர்ஷியா அத்தொகையைப் பெற மறுத்த போது, பஸானியோ வருந்தி, "தாங்கள் விரும்புவது எதுவாயினும் நாங்கள் தயங்காமல் தருகிறோம்; அதைக் கூறியருளுங்கள்,” என்று வேண்டினான். அவன் கையிலிருந்த கணையாழியைத் தருமாறு போர்ஷியா கேட்டாள். “இந்தக் கணையாழியைவிட விலையுயர்ந்தது, சிறந்தது வேறு எதுவானாலும் எங்கிருந்தாலும் தேடி வாங்கித் தருவேன்; இஃது என் மனைவியால் அளிக்கப்பட்டது; இதனை என்றும் பிரியேன் என்று நான் அவளிடம் வாக்களித்துள்ளேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்," என்று பஸானியோ வேண்டிக் கொண்டான். ஆனால், அந்தோனியோ அதனைப் பொருட்படுத்தாமல் கொடுத்துவிடுமாறு கூறினான்.பஸானியோ மன வருத்தத்தோடு அதனைக் கழற்றிக் கொடுத்து விட்டான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நெரிஸாவும் கிராஷியானோ விடம் கணையாழி கேட்டுப் பெற்றுக்கொண்டாள்.

போர்ஷியாவும் நெரிஸாவும் பெல்மாண்ட் அடைந்து,ஆண் உடைகளைக் கழற்றிவிட்டு, வழக்கம் போல் உடுத்திக்கொண்டு, கணவன்மாரை எதிர்நோக்கியபடி மிக மகிழ்ச்சியோடு இருந்தனர். பஸானியோ அந்தோனியோவுடன் பெல்மாண்ட் சென்றான்.