உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

5

ஆகின்றனர். அதன் அருட்பேறடைந்தவர் மெலியராயினும் வலியவரை அடக்கி ஆட்கொள்ளுகின்றனர்.

சிறுவர் பொன்னையோ பொன் போன்ற பகட்டான பொருள்களையோ வைத்து விளையாடுகின்றனர்; பெரியோர் பொன்னை வைத்துச் சூதாடுகின்றனர். ஆடவர் பொன்னைப் பொருளாக மதித்து அதனுக்காக மாளுகின்றனர்; பெண்டிர் அப் பொன்னைக் கையாளும் வண்ணம் ஆடவரைப் பகடையாக வைத்தாளுகின்றனர். நாகரிக மிக்கவர் தம் கழுத்திலும் கையிலும் காலிலும் பொன்னணிகள் அணிந்து மகிழ்வர். நாகரிக மற்றவரோ இவ்வியற்கையான இடங்கள் போதா என்று பிற உறுப்புக் களிலும் தொளை செய்து பொன்னணிகளுக்குத் தம் உடலில் புதிய இடம் தேடுகின்றனர். இவ்வாறாகச் சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர், நாகரிகமற்றவர், நாகரிக மிக்கவர் ஆகிய அனைவருடைய உள்ளங்களையும் பொன் கவரத்தக்க பொருளாய் அமைந்துள்ளது. இக்கவர்ச்சி ஆக்க முறையில் நற்பயனுடையதுதானா அன்றா என்று ஆராய்வோம்.

உலகியல் விழைவுகள் யாவுமே கானல்நீர்போல் நிலையற்றவை என்று கூறுவர் முற்றத் துறந்த முனிவர். ஆனால் உலகியலில் ஆழ்ந்து ஆராய்ந்த அறிஞர்கூட அவ்வப்போது பொன்னின் தேட்டம் கானல் நீர்த் தேட்டம் போன்றது என்று கருதுவதுண்டு.

பொன்னையே பற்றுக்கோடாகக் கொண்டு மற்ற எல்லாப் பொருள்களையும் புறக்கணிக்க எண்ணிய பேராவற்பேயன் கதையை யாவரும் அறிவர். உலகெலாம் பொன்மயமாயிருந்தால் நன்று என்று எல்லாருந்தாம் எண்ணுகிறோம். மனித வகுப்பின் இவ்விழைவினை நடைமுறையில் நிறைவுபெறக் கைவரப் பெற்றான் பேராவற்பேயன். பெற்று அவன் தான் நற்பேற்றுப் பேரலையின் உச்சியில் மிதப்பதாகவும், தான் பெறத்தகும் பேறனைத்தும் பெற்றதாகவும் எண்ணினான். (இதுவும் நம்மில் யார் எண்ணார்!) ஆயின் அந்தோ. மலர் பொன்னானால் அதற்கு மணமேது? உணவும் நீரும் பொன்னானால் அதனை உண்ணலும் பருகலும் கூடுமோ? மாந்தரும் உயிரினங்களும் பொன்னானால் அவை பொன்னானாலும் பெறற்கரிய உயிர் பெற்று வாழுமோ?