உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

25

பிற திண்பொருள்களையும் மக்கள் வழங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாகவே பொன், மக்களால் அணிகளாக வழங்கப் பெற்றது என்று காணலாம்.

மற்ற திண்பொருள்களைவிட முன்னதாக மனிதன் பொன்னை யறிந்ததற்கு அதன் பகட்டான தோற்றமே, சிறப்பான காரணமாகும். அக்கால மனிதன் குன்றுகளின் பக்கம் வாழ்ந்து காய்கனி கிழங்குகளையும் விலங்கு பறவைகளின் ஊனையும் தின்று வந்தான். ஓய்ந்த நேரங்களில் அருவிகளின் ஓரமாகவோ சுனை, சிற்றாறுகளின் ஓரமாகவோ சென்று குளிர்ந்த நீரைப் பருகியும் அதில் நீராடியும் வந்தான். அவ்வப்பொழுது அவன் இளவேனிற் காலத்தில் நிலவின் பொழிவில், அவ்வாறுகளின் மென் மணலின்மீது படுத்து இயற்கையின் அழகில் மனத்தை ஈடு படுத்துவான்; அல்லது அதில் உலவி மகிழ்வான். அத்தகைய நேரங்களில் ஒரு சமயம் அவன் அம்மணலிடையே மினுமினுப் பான நுண்பொடிகளைக் கண்டான். குழந்தையுள்ளத்தையுடைய அவன் குழந்தையைப்போலவே உள்ளார்வத்துடன் சென்று அதனை எடுக்க, அது மிக நுண்ணிய பொடியானபடியால் கையில் எடுக்குமுன் மாயமாய் மறைந்துவிட்டது. ஆயினும் இம் மாயப் பொடியின் தோற்றத்தில் அவன் மனம் ஒன்றுபட்டு மீண்டும் மீண்டும் அதனையே நாடலுற்றது.

அவன் வாயிலாக அச் செய்தியைக் கேள்வியுற்ற அவன் தோழரும் தம் மனத்தை அம் மாயப்பொடிக்கே பறிகொடுத்து அதனைத் தேடித் துழாவி விளையாடினர். அதன்பின் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் கையில் எடுக்கும் அளவுடைய அத்தகைய மணிக்கல் அகப்பட்டது. அதுபோது அக்கால மனிதன் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் எல்லையில்லை. அவன் அதனைக் கையிலெடுத்து மீண்டும் மீண்டும் அதனைக் கண்ணுற்று உவகையுற்று ஆடினான்,பாடினான், கூத்தாடினான். தோழர்களிடமும் உற்றாரிடமும் சென்று அதனைக் காட்டி அதனைப் பெற்றதன் பேற்றையும் திறனையும் போற்றிப் பெருமை பாராட்டினான். அவர்களும் அதன் கவர்ச்சியுட்பட்டு அவனை மதித்தனர்.

பலரும் அதுமுதல் ஆற்றோரங்களில் திரிந்து அதே பொருளை நாடினும் 'கொடுத்துவைத்த' ஒரு சிலர்க்கே அது