உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

அப்பாத்துரையம் 40

-

சித்திரை மாதத்தில் ஒருநாள் வெயில் நன்றாய்க் காய்ந்து கொண்டிருக்கும்போது, மலைப்புறத்தில் சுற்று முற்றும் ஆட்டமோ அசைவோ இல்லாத அமைதியான வேளையில், வழக்கம்போல் அவன் புல்மீது படுத்துக் கொண்டு பனிமலையி லிருந்து வீசும் குளிர்ந்த மென்காற்று உடலைத் தழுவிச் செல்வதால் ஏற்படும் இன்பத்தை நுகர்ந்து மகிழ்ந்திருக்கையில், நெஞ்சை உருக்கும் மாயமான இன்னிசை ஒன்று காற்றிலே மிதந்து வருவதைக் கேட்டான். அது ஏதோ நெடுந்தொலையிலிருந்து கிளம்புவதாகத் தெரிந்தது. மலையில் கிளம்பிய எதிரொலிபோல் இருந்ததே தவிர, உடலெடுத்த உயிர்ப்பிறவியின் தொண்டையி னின்றும் பிறந்த குரலோசைபோல் தோன்றவில்லை. உடலையும் உள்ளத்தையும் இனிக்கவைத்து உருக்கும் அந்த இளமென்கீதம், தெய்வமகளிர் இசைக்கும் பாடலாகத்தான் இருக்கலாமேயன்றி, மக்கள் பாடும் பாட்டாக இருப்பதற்கு இல்லை.

வானவீதியில் வந்த அந்த அமுத இசையின் இனிய ஒலி அடங்கும்வரையில் மலையழகன் மாயத்தால் கட்டுண்டவன் போல் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு சட்டென்று எழுந்து அங்கும் இங்கும் எங்கும் தேடி தேடினான். பாட்டிசைத்தவரைக் காண ஓடினான். ஆனால், யாருமே தென் படவில்லை. செடிகளின் மறைவிலோ, மரங்களின் கிளை களிலோ, ஊசிப் பாறைகளின் மீதோ யாருமே இருப்ப தாகவுந் தெரியவில்லை. புல்வெளியில் பசுக்கள் அமைதியாக மேய்ந்தன. கால் வழுக்கும் கடும்பாறைகளில் ஆடுகள் தங்களுக்குள்ள தனித் திறமையுடன் ஏறிநின்று தழைகளைக் கடித்துத் திரும்பின.

அன்றுபொழுதடைந்து அவன் வீடு திரும்பும்போது அந்திவெள்ளி பனிமலை முடிமீது தன் படரொளியை வீசி நின்றது. வழக்கம்போல் பசுக்களும் ஆடுகளும் வீடுநோக்கி நடந்தன; ஆனால், வழக்கம்போல் வீடு திரும்பும்போது அவன் குரல் எடுத்து உணர்ச்சியாக ஊக்கத்துடன் பாடிவரும் மலை நாட்டுப் பாடல்கள் அன்று அவனிடமிருந்து கிளம்பவில்லை. தலை நிமிர்ந்து மிடுக்காக நடக்கும் நடையும் இல்லை. ஏதோ வாயடைத்துப் போனவன்போலவும், கவலை கொண்டவன் போலவும், ஆழ்ந்த எண்ணத்துடன் மெள்ள நடந்தான். அந்த அருந்திறல் பாடகர் யாரென்பதைக் கண்டறிய முடியாது போனது அவனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.