உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

183

“ஏண்டா அப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" என்று மண்கலயத்தில் பால் வார்த்துக் கொடுத்துக் கொண்டே பெருங்குறத்தி அவனைக் கேட்டாள். வாடிப்போயிருந்த அவன் முகத்தை உற்று நோக்கி, அவனது மனதில் குடிகொண்டுவிட்ட துயரத்தை அறிய அவள் முயன்றாள்.

சுடச்சுட வைத்திருந்த கேழ்வரகு அடையையும், வீட்டில் கடைந்தெடுத்த வெண்ணெயையும், நறுமலர்களின் மணம் செறிந்த மலைத்தேனையும் ஆர அமரத்தின்றுகொண்டே அவன் மௌனமாக இருந்தான். அவன் உள்ளத்தை வாட்டும் நிகழ்ச்சியைக் குறித்து அவன் ஏதுமே பேச விரும்பவில்லை. ஆனால், அவன் தாயோ அவனது முகவாட்டத்தால் மனம் வருந்திப் பெருங்கவலைகொண்டாள். மேலும், அந்நாள்வரையில் அவன் தன் தாயாரிடம் எதையும் ஒளித்தது கிடையாது. எனவே, கடைசியாக அவன் அவளிடம் மலைமீது கேட்ட மனமுருக்கும் எழிலிசையைப்பற்றியும், பாடியவரைத் தேடியுங் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.

பெருங்குறத்தியின் முகம் கறுத்தது. “அட, பாவி மகனே, அகப்பட்டுக் கொள்ளாதேடா; நீ இள வயசு; நீர் அணங்கு உன்மேல் கண் வைத்து விடாமல் பார்த்துக்கொள் அப்பா; கருத்தாக இரு; தாய்க்கு ஒரே பிள்ளை நீ,” என்று அவள் படபடத்துக் கூறினாள்.

“ஏனம்மா நீ இப்படி அஞ்சுகிறாய்? நீர் அணங்கு என்றாயே அவள் யார்? சொல்லம்மா,” என்று ஆவலோடு கேட்டான்.

“அப்பா அந்த மாயக் குரலின் கவர்ச்சி இன்னும் நீங்காமல் இருக்கும்போது அதைப்பற்றிப் பேசக்கூடக் கூடாது,” என்று பெருங்குறத்தி மகன் காதருகில் சென்று தாழ்ந்த குரலில் கூறினாள். “நீ சற்று வளர்ந்து பெரியவன் ஆனபின் அவளைப் பற்றிக் கூறுகிறேன். ஆனால், அதுவரையில் பனிமலையில் கேட்கும் இன்னிசைப் பாடல்கள் உன்னை இழுத்துச் சென்று விடாமல் பார்த்துக் கொள்,” என்றாள்.

பிறகு அதைப்பற்றி ஒரு பேச்சுமே யாரும் பேசவில்லை. தாய் சொல்லை மறுத்துப் பேசும் வழக்கமே மலையழகனிடம் கிடையாது. ஆனால், நீர் அணங்கைப் பற்றி அவள் குறிப்பாகச் சொன்னதைக் கேட்டதுமே அவளை நேரில் பார்க்கவேண்டு