நல்வாழ்வுக் கட்டுரைகள்
83
உயர்த்தும். பண்பின் உயர்வுமிகுந்தோறும் தனி மனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகள் தவிடுபொடியாகி, அடிப்படைப் பண்பாகி மனிதப்பண்பு வந்தெய்தும். இம் மனிதப் பண்பு தனி மனிதனாகிய கீழ் எல்லையையும், மனித இனமாகிய பேரெல்லையையும் பிணைப்பதாகும்.
குடும்பத் தலைவர் கடன்படாத பொருளியல் வாழ்வும் நோய்க்கிடங்கொடா உடல் நல வாழ்வும் பேணுதல் வேண்டும். பொருள்துறையில் குடும்பத் தலைவர் இருவருள் எவரும் சமூகத்திற்குக் கட்டுப்படுவதன்றி, எந்தத் தனி மனிதனுக்கும், குழுவுக்கும் தனியடிமைப்படல் கூடாது. அத்தனியடிமைக்கு இடங்கொடுக்கும் மனிதர் மட்டுமன்றி, அதனை ஆட்கொள் பவனும், சமூகமும் நாளடைவில் கெடுவது உறுதி.நல்லுழைப்பும் பசித்துண்டலும், வருவாய்க்குட்பட்டு வாழலும் மேற்கூறியவை இரண்டையும் பேணுபவை. ஆடவர் அடிமைப்படுவது. தவறாயினும் பெண்டிர் அடிமைப்படுவது அதனினும் பன்மடங்கு தவறு ஆகும். ஏனெனில், பெண்டிரின் மதிப்பே சமூகத்தின் தன்மதிப்பளவை ஆகும்.
விருந்தினராகப் புதிதாக வருபவர்கட்கு உதவுதலும், சுற்றம், நண்பர் ஆகியவர்கட்கு உதவுதலும், தம்மையண்டி அழைப்பவரை வேலையாட்களாக நடத்தாமல் நண்பராகவே நடத்துதலும் குடும்ப வளர்ச்சி பேணுபவன் தவறாது மேற்கொள்ள வேண்டிய கடமைகள் ஆகும்.
ஒருவன் தன் வருங்காலத்திற்கும், தன் குடும்பத்தின் எதிர் காலத்துக்கும் வைத்துச் செல்லத்தக்க பொருள் வைப்பீடுகள் பிள்ளைகள் கல்வி பிறர்க்குதவுதல் ஆகிய இரண்டுமே. கல்வியை மதியாது செல்வத்தை நம்பி வாழும் சமூகங்கள் கண்ணைப் பேணாது, கண்ணாடியைப் பேணுபவை ஆகும். ஏனெனில் செல்வம் இழக்கத்தக்கது; கல்வியோ அழியாதது; தலைமுறை தலைமுறையாக எளிதில் வளர்ச்சி பெறுவது. அது செல்வத்தை ஆக்கவும், ஆக்கிய செல்வத்தை அழிவுறாது பேணவும், அழிந்த செல்வத்தை மீட்டும் பெறவும் உதவவல்லது.
பொதுவான குடும்பப் பொறுப்புகளை இத்துடன் நிறுத்திப் பெற்றோர் என்ற முறையில் குடும்பத் தலைவர்க்குரிய கடமைகளைப் பற்றி வரும் பிரிவில் கூறுவோம்.