உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அப்பாத்துரையம் – 43

பொருளீட்டு பவராயிருப்பது பெரும்பாலாதலால், அவர்கள் ஆடவரை மட்டுமே பேணித் தம்மையோ, தம் பெண்மக்களையோ புறக்கணிப்பதும் உண்டு. இன்னும் சிலர் தம் குடும்ப ஆடவர் கூட்டுறவை வெறுத்து, வெளி ஆடவர் மயக்கில் ஆழ்ந்து ஒருவர்க் கடிமையாயிருப்பதினும் பலருக்கு அடிமையாயிருப்பது மேல் என்ற நிலையை மேற்கொண்டு விடுவதும் உண்டு. முந்திய பண்பு நாகரிகக்கேடு என்பதில் ஐயமில்லை. பெண்டிர் குடும்பத்தில் ஆளப்பிறந்தவர்கள். வெளியிலோ குடும்பப் பண்பைப் பேணப் பிறந்தவர்கள். ஆகவே, பெண்டிர் ஆடவரையும் ஆண் மக்களையும் பேணும் தம் நல்லியலில் குறைபடாமல், அதே குறிக்கோளுடன் தம்மை அதைவிட நன்கு பேணக்கடவர். இவ்வகையில் அவர்களை ஊக்குதல் ஆடவர் கடன்.

ஆண்பாலாரின் வளர்ச்சியினும், பெண்பாலாரின் வளர்ச்சியே சமூகத்திற்கு உயிர்நிலையானது என்பதை ஆடவன், தானறிவதுடன், பெண்டிருக்கும் அறிவிக்கக் கடமைப்பட்டவன். நாகரிக மரபில் மிகப்பல நாடுகளிலும் தந்தையே குடும்பத் தலைவனாயிருப்பதன் காரணம், பெண்ணின் பெருந்தன்மையால் சமூகம் தீமையுறாமல் ஆடவன் அவளைக் காத்தற் பொருட் டாகவேயாம். அதுபோல, மணவினை என்ற ஒன்று அமைந்துள்ளதும் பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக அன்று.அது விலங்குத் தன்மையிலிருந்து, இன்னும் நெடுந்தொலை சென்றுவிடாதிருக்கும் ஆணுலகிலிருந்து, பெண்களைப் பாதுகாத்துச் சமூகத்தை வளர்க்க அறிஞர் வகுத்த முறையேயாகும்.

காதலியரையும் தாய்மாரையும் பெண்மக்களையும் ஆண்மக்களுக்கு ஒப்பாகவன்று அவர்கட்கும் முற்படக்கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், ஆடவர் கல்வி ஓரளவு தொடக்கத்தில் தனிமனிதர் பயிற்சி, அஃதாவது உணவு, உடை, உறையுள் தேடும் தொழிற் பயிற்சியாகவும் பின்னரே சமூகப் பயிற்சி, உயர்கலைப் பயிற்சியாகவும் இருக்க முடியும். பெண்டிர்க்கும் தனி மனிதர் பயிற்சி வேண்டுவதாயினும், அதிற் சிறிது குறைந்தாலும், அதனை விட்டுவிட்டாலும் மிகுதியாகக் கேடு வராது. ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் செயல் செய்வதினும் இயக்குதற்கே